பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மக்சீம் கார்க்கி


இந்த இளைஞனை, எல்லாப் பிரச்சினைகளிலும் ஊடுருவிச் செல்லும் ஏதோ ஒரு நூலிழை அனைத்து மக்களையும் இணைக்கிறது என்று காணும் பாவெலை அவர்கள் மதிக்கத் தொடங்கினார்கள்.

இதன் பின்னர் பாவெலின் மதிப்பு மேலும் உயர்வதற்குக் காரணமாயிருந்தது ஒரு நிகழ்ச்சி, அதுதான் “சதுப்புக் காசு” சம்பவம்.

தொழிற்சாலையைச் சுற்றி அழுகல் வட்டமாய் ஒரு பெரிய சதுப்பு நிலம் பரவியிருந்தது. அங்கே பிர் மரங்களும், பிர்ச் மரங்களும் மண்டி வளர்ந்திருந்தன. வேனிற்காலத்தில் அந்தச் சதுப்பு நிலத்திலிருந்து மஞ்சள் நிறமான நுரை கொப்புளித்துப் பெருகும்; இந்தச் சாக்கடை நுரையிலிருந்து படைப்படையாகக் கொசுக் கூட்டம் உற்பத்தியாகிக் கிளம்பும். அந்தக் கொசுக்களின் உபத்திரவத்தால், தொழிலாளர் குடியிருப்பில் காய்ச்சலும் ஜுரமும் உண்டாகும். அந்தச் சதுப்பு நிலம் தொழிற்சாலைக்குச் சொந்தமானது. தொழிற்சாலையின் புதிய மானேஜர் அந்தச் சதுப்பு நிலத்தைத் தூர்ப்பதன் மூலம் எரு எடுத்து அதன் மூலம் லாபம் அடையத் திட்டமிட்டார். அந்தச் சதுப்பு நிலம் தூர்க்கப்பட்டால் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், குடியிருப்பின் சுகாதாரமும்தான் மேம்பாடு அடையும் என்று காரணம் கூறி, அந்தச் சதுப்பு நிலத்தைச் சீர்படுத்துவதற்காக தொழிலாளர்களின் சம்பளத்தில் ரூபிளுக்கு[1] ஒரு கோபெக்[2] பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைக் கண்டு தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள். அவர்கள் இந்த உத்தரவை எதிர்த்ததற்குரிய முக்கிய காரணம், தொழிற்சாலைக் காரியாலயத்தின் குமாஸ்தாக்களுக்கு மட்டும் அந்தச் சம்பள வெட்டிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மானேஜர் இந்தக் கூலிக்குறைப்பு உத்தரவைத் தொழிற்சாலை விளம்பரப் பலகையில் ஒரு சனிக்கிழமையன்று வெளியிடச் செய்தார். அன்று பாவெலுக்கு உடல் நலமில்லாததால் அவன் வேலைக்குச் செல்லவில்லை; வீட்டில் இருந்தான். எனவே, அவனுக்கு அந்த உத்தரவைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால், மறுநாள் வயதும், கண்ணியமும் நிறைந்த பாத்திரத் தொழிலாளி சிலோவும், நெட்டையான பூட்டுத் தொழிலாளி மாகோதினும் பாவெலைப் பார்க்க வந்தபோது மானேஜரின் தீர்மானத்தைப்பற்றிச் சொன்னார்கள்.

“நாங்கள், வயதானவர்கள் இந்த விஷயத்தைப்பற்றிக் கலந்து பேசினோம்” என்று மனங்கவரும் முறையில் பேசத் தொடங்கினான்


  1. ரூபிள் — ருஷியாவின் நாணயம் (நமது ரூபாயைப் போன்றது).— மொ-ர்
  2. கோபெக் —ருஷியாவின் செப்புக் காசு. —மொ-ர்