பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

85


சிஸோவ். “நீ விஷயம் தெரிந்தவன் என்பதால், உன்னிடம் இது பற்றிப் பேசுவதற்காக எங்களை அனுப்பியுள்ளார்கள் தோழர்கள். கொசுக்களுடன் போராட, நம்மிடம் பணம் பறிக்க மானேஜருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் ஏதாவது இருக்கிறதா?”

“யோசித்துப்பார்” என்று தனது குறுகிய கண்களில் பிரகாசம் தெறிக்கப் பேசினான் மாகோதின், “நாலு வருஷத்துக்கு முன்னால், இந்த முடிச்சுமாறிப் பயல்கள் என்னமோ குளியல் அறை கட்டப் போவதாகச் சொல்லி, நம்மிடம் காசு பிடுங்கினார்கள். மூவாயிரத்து எண்ணூறு ரூபிள்களைப் பிடுங்கிச் சேர்த்தார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கே? அந்தக் குளிக்கிற இடம்தான் எங்கே? இதையும் காணோம்; அதையும் காணோம்!”

அந்தக் கூலிக் குறைப்பு அநீதியானதுதான் என்பதை பாவெல் விளக்கினான்; மேலும் அதன் மூலம் தொழிற்சாலைக்குக் கிடைக்கக்கூடிய லாபத் தொகையையும் குறிப்பிட்டான். அந்த இரு மனிதர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டே திரும்பிப் போனார்கள், அவர்கள் போனவுடன் லேசாகச் சிரித்துவிட்டு, பாவெலின் தாய் சொன்னாள்:

“பாவெல், கிழவர்கள் கூட உன்னிடம் யோசனை கேட்கக் கிளம்பிவிட்டார்கள்!”

அவளுக்குப் பதில் சொல்லாமல் பாவெல் கீழே உட்கார்ந்து ஏதோ எழுத ஆரம்பித்தான். சில நிமிஷம் கழித்து, அவன் தன் தாயைப் பார்த்துச் சொன்னான்:

“அம்மா, நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நகர் வரையிலும் போய்வர வேண்டும்.”

“அதென்ன, ஆபத்தான இடமா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம், நமக்காக அங்கொரு பத்திரிகை நடக்கிறது. அங்கு தான் உன்னை அனுப்பப்போகிறேன். அடுத்த இதழில் இந்தக் கூலிக் குறைப்பைப் பற்றிய செய்தி வெளிவந்தாக வேண்டும்.”

“சரி, இதோ போகிறேன்” என்றாள் அவள்.

இதுதான் மகன் அவளது பொறுப்பில் விட்ட முதல் பணி. அவன் நிலைமையைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டது அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது.

“பாஷா! எனக்கும் புரிகிறது” என்று உடை உடுத்திக்கொண்டே பேசினாள் அவள். “அவர்கள் மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.