பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

87


மூச்சுக்கூடத் திணறித் தவித்தது. ஏதோ ஒரு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழப்போவதாக அவள் உணர்ந்தாள். தொழிற்சாலையின் வாசலில் பெண்களின் ஒரே கூட்டம்; அவர்கள் சண்டையிட்டுக்கொண்டும் சலசலத்துக்கொண்டும் இருந்தார்கள், தொழிற்சாலையின் முற்றத்துக்குள் அவர்கள் மூவரும் நுழைந்தவுடனேயே அவர்களைச் சுற்றிலும் உணர்ச்சிப் பரவசத்தோடு இரைந்து கொண்டிருக்கும் இருண்ட மாபெரும் ஜனக்கூட்டத்தைக் கண்டார்கள். தொழிற்சாலையின் உலைப் பட்டறைச் செங்கற் சுவருக்குப் பக்கத்தில் கிடந்த பழைய இரும்புச் சாமான்களின் குவியல் மீது சிஸோவ், மாகோதின், வியாலவ் முதலியவர்களும், செல்வாக்குள்ள ஐந்தாறு தொழிலாளிகளும் நின்றுகொண்டிருந்தார்கள். தொழிலாளர்களின் கவனம் முழுவதும் அவர்கள் பக்கமே திரும்பியிருந்தது என்று தாய் கண்டாள்.

“இதோ பாவெல் விலாசவ் வந்துவிட்டான்!” என்று யாரோ சத்தமிட்டார்கள்.

“சத்தம் போடாதீர்கள்!” என்ற குரல் பல திசைகளிலிருந்து ஒரே சமயத்தில் ஓங்கி ஒலித்தது.

எங்கோ பக்கத்திலிருந்து ரீபினின் நிதானமான குரல் கேட்டது: “நாம் வெறும் கோபெக்குக்காகப் போராடப் போவதில்லை; நியாயத்துக்காகவே போராட வேண்டும்! ஆமாம்! நாம் இந்தக் கோபெக் காசைப் பிரமாதப்படுத்தவில்லை. நமது கோபெக்கும் மற்ற காசுகளைப்போலவே வட்டக் காசுதான். ஆனால், மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம், அவ்வளவுதான். ஆனால், மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை, நியாயத்தைத்தான் மதிக்கிறோம்! ஆமாம்!”

அவனது பேச்சுக் கூட்டத்தினிடையே பரவி ஒலித்தது. உடனே பல குரல்கள் எழும்பின.

“ரொம்ப சரி, ரீபின்!”

“பாவெல் இதோ வருகிறான்!”

தொழிற்சாலை யந்திரங்களின் கர்ஜனை, நீராவியின் இரைச்சல், யந்திரச் சக்கரங்களின் மீது ஓடும் நாடாக்களின் படபடப்பு முதலிய சகல ஓசைகளையும் அமுங்கடித்து, ஓங்காரமிடும் சுழற்காற்றாக ஒன்று கலந்தது. அத்தொழிலாளர்களின் குரல்கள். எட்டுத் திசைகளிலிருந்தும் ஜனங்கள் தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டும், ஒருவருக்கொருவர்