பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

மக்சீம் கார்க்கி


“அழாதீர்கள். அம்மா! வீணாக மனத்தை நோகச் செய்து கொள்ளாதீர்கள், என்னை நம்புங்கள். அவர்கள் பாவெலைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஒரு சாட்சியமும் கிடையாது. வெந்து போன மீனைப் போல்., எல்லோரும் ஊமையாகவே இருக்கிறார்கள்.....”

தன் கரத்தைத் தாயின் தோள்மீது வைத்தவாறே அவளை அடுத்த அறைக்குள் அழைத்துச்சென்றான்; அவனோடு ஒட்டித் தழுவிக்கொண்டாள் அவள். ஒரு அணிற்குஞ்சின் சுறுசுறுப்போடு அவள் தன் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள்.

“பாவெல் உங்களுக்குத் தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னான். அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்சாகமாகவும், நன்றாகவும் இருக்கிறாள். சிறையிலே ஒரே கூட்டம்! சுமார் நூறு பேரைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள். நம் ஊர் ஆட்களும் இருக்கிறார்கள். நகரிலிருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு சொட்டடிக்கு மூன்று அல்லது நாலு பேராகப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். சிறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள். இந்தப் பிசாகப் பிறவிகளான போலீஸ்காரர்கள் கொடுத்துள்ள வேலையினால் அவர்கள் இளைத்துக் களைத்து ஓய்ந்து போயிருக்கிறார்கள். அதிகாரிகள் ரொம்பக் கடுமையாக இல்லை; அவர்கள் எங்களைப் பார்த்து ‘பெரியோர்களே, அமைதியாக மட்டும் இருங்கள். வீணாய் எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. நமது தோழர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்; புத்தகங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள், சாப்பாட்டையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அது ஒரு நல்ல சிறைதான். ரொம்பப் பழசு. அட்டுப் பிடித்த சிறை; என்றாலும் கைதிக்கு மோசமாக இல்லை. கிரிமினல் கைதிகளும் ரொம்ப நல்லவர்கள், அவர்கள் நம்மவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்கிறார்கள். நானும் புகினும் இன்னும் நால்வரும் விடுதலையாகிவிட்டோம். பாவெலும் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தான் கடைசியாக வருவான். அவன் அவர்களிடம் தாறுமாறாக நடந்து கொள்வதால், அவன்மீது அவர்களுக்கு ஒரே கோபம். அவனைப். பார்க்கக்கூட போலீஸ்காரர்கள் பயப்படுகிறார்கள். அநேகமாக அவனைச் சீக்கிரம் விசாரணைக்குக் கொண்டு செல்வார்கள்; இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் அடித்துத் தள்ளுவார்கள்!