பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்சீம் கார்க்கி

227


“அதோ, தலைவர்கள் போகிறார்கள்.”

“நமக்குத் தலைவர்கள் யாரென்றே தெரியாது.”

“நான் ஒன்றும் தப்பாய்ச் சொல்லவில்லையே.”

வேறொரு வாசலிலிருந்து யாரோ உரக்கச் சத்தமிட்டுச் சொன்னார்கள்;

“போலீஸார் அவர்களைப் பிடித்துக்கொண்டுபோய்விடுவார்கள், அத்துடன் அவர்கள் தொலைந்தார்கள்”

“அவர்கள்தான் ஏற்கெனவே இவர்களைக் கொண்டு போனார்களே?”

ஒரு பெண்ணின் அழுகுரல் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தெருவில் எதிரொலித்தது.

“நீ செய்யப்போகிற காரியத்தை யோசித்துப்பார். நீ ஒன்றும் கல்யாணமாகாத தனிக்கட்டைப் பிரம்மச்சாரியில்லை”

அவர்கள் அந்த நொண்டி ஜோசிமல் வீட்டின் முன்பாகச் சென்றார்கள். ஜோசிமல் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, காலை முறித்துக்கொண்டுவிட்டான். அதிலிருந்து அவன் நொண்டியாய்ப் போனான்; தொழிற்சாலை மாதாமாதம் அவனுக்குச் கொடுக்கும் ஓய்வுச் சம்பளத்தில் காலம் தள்ளி வருபவன் அவன்.

“பாவெல்” என்று தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டு கத்தினான் அவன். “அடே போக்கிரி! அவர்கள் உன் கழுத்தை முறித்து விடுவார்களடா. உனக்கு என்ன நேரப் போகிறது பார்!”

தாய் ஒரு கணம் நடுநடுங்கி, பிரமையடித்து நின்றாள். அவள் உள்ளத்தில் கூர்மையான கோப உணர்ச்சி ஒரு கணம் ஊடுருவிச் சென்றது. அவள் அந்த நொண்டியின் கொழுத்துத் தொள தொளத்த முகத்தைப் பார்த்தாள், அவன் ஏதோ திட்டிவிட்டு தலையை உள்ளே இழுத்துக்கொண்டான். அவள் வெகுவேகமாக நடந்து சென்று தன் மகனை எட்டிப் பிடித்தாள். அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள். கொஞ்சம் கூடப் பிந்தாமல் நடக்க முயன்றாள்.

பாவெலும் அந்திரேயும் எதைப்பற்றியும் கவலை கொண்டதாகவோ கவனித்ததாகவோ தெரியவில்லை. அவர்களைக் குறித்துச் சொல்லப்படும் பேச்சுக்கள்கூட அவர்கள் காதில் விழவில்லை அவர்கள் அமைதியாகவும் அவசரமில்லாமலும் நடந்து சென்றார்கள்.