பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

மக்சீம் கார்க்கி


அவர்கள் எதற்காக நம்மைத் தொடவேண்டும். எல்லோருக்கும் பயன்பெறக்கூடிய உண்மையை நாம் எடுத்துக் கூறுவதற்காகவா? அந்த உண்மை நமக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அவர்களுக்கும் தேவை. அந்தத் தேவையை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து. அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை. அவர்கள் இந்த உண்மையை உணரும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் நமது முன்னணியை விடாது முன்னேறிச் செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். தோழர்களே! முன்னேற வேண்டும்!’

பாவெலின் குரல் உறுதி நிறைந்து ஒலித்தது. அவனது சொற்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் ஒலித்தன. எனினும், கூட்டம் கலைந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக அணி வகுப்பிலிருந்து வெளியே வந்து, வீடுகளை நோக்கி வேலிப்புறமாக ஒதுங்கி நழுவிச் செல்லத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊர்வலம் கூரிய மூக்குடனும் அகன்ற உடலுடனும் இருப்பது போலத் தோன்றியது. அதன் தலைப்புறத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான்; அவனுக்கு மேலாக, தொழிலாளி மக்களின் செங்கொடி பிரகாசமாக ஒளிசிதறிப் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் நிலையைப்பற்றி வேறொரு உவமை கூடச் சொல்லலாம். ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது. அந்தக் கூட்டம், அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்.

28

தெருக்கோடிக்கு அப்பாலுள்ள மைதானத்துக்குச் செல்ல முடியாதபடி உணர்ச்சி பேதமே இல்லாத முகங்களே இல்லையென்று சொல்லத் தகுந்த ஒரு சாம்பல் நிற மனிதச் சுவர் வழியை அடைத்து மறித்துக்கொண்டு நின்றது. அந்த மனிதர்கள் ஒவ்வொருவரது தோளிலும் பளபளவென்று மின்னும் துப்பாக்கிச் சனியன்கள் தெரிந்தன. அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து நின்ற அந்தச் மனிதச் சுவரிலிருந்து ஒரு குளிர்ச்சி கனகனத்தது. தாயின் இதயமும் குளிர்ந்து விறைத்தது.