பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

மக்சீம் கார்க்கி


அவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள், அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்:

“நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிடவேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்......”

“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா?”

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

“இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர் காலத்திலும்- நான் சாகிற வரையில்-ஒரு காமயாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா?”

வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடுவீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான், பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்;

“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.

“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து.