பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

265


சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிது கூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது, நான், ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?”

நிகலாயின் முகம் வெளுத்தது,

“இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.

“நான் வேறு என்னத்தைச் சொல்ல?” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால்...”

அவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்!”

நிகலாவும் எழுந்தான்: மீண்டும் ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு - என் இடத்துக்கு வருகிறீர்கள். இல்லையா?

அவள் தலையசைத்தாள்.

“சரி, எப்போ ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன்; “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலை குனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.

“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா?” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.

“இல்லை.”

உடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.