பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

மக்சீம் கார்க்கி


சோபியா ஒரு சிகரெட்டை எடுத்துட் பற்ற வைத்தாள். அவள் இடைவிடாது ஒரேயடியாய்ப் புகைபிடித்தாள்.

“இது காலஞ்சென்ற சோஸ்த்யாவுக்கு ரொம்பப் பிடித்த இசை” என்றாள் அவள். அவள் நெடுக புகைத்து மூச்சு வாங்கினாள். பிறகு மீண்டும் வாத்தியத்தின் கட்டைகளைத் தடவி, ஒரு சோக நாதத்தை எழுப்பினாள்; “அவரிடம் நான் எவ்வளவு ஆசையோடு இதை வாசித்துக் காட்டுவேன். அவர் எவ்வளவு உணர்ச்சி வசத்தோடு, தம் இதயமே விம்மிப் புடைத்துப் புளகாங்கிதம் அடையும்படி இந்தச் சங்கீதத்தைக் கேட்பார்!”

“அவள் தன் கணவனைப்பற்றி நினைத்துக் கொள்கிறாள் போலிருக்கிறது” என்று முனகிக்கொண்டாள் தாய்; “அவள் புன்னகை கூட செய்கிறாளே.....”

“அவர் என்னை எப்படி மகிழ்வித்தார்!” என்று மீண்டும் சோபியா மெதுவாகச் சொன்னாள். அவளது சிந்தனைகளோடு வாத்தியத்தின் மெல்லிய இசையையும் இணைத்து வெளியிட்டாள்; “எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்!”

“ஆமாம்” என்று தன் தாடியை வருடிக்கொண்டே சொன்னான் நிகலாய்; “அவன் ஒரு இனிய மனிதன்.”

சோபியா அப்போது தான் பற்றவைத்த சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு, தாயிடம் திரும்பினாள்.

“இந்தச் சத்தம் உங்களுக்குத் தொந்தரவாயில்லையே?” என்றாள்.

தாயால் தனது உணர்ச்சிக் குழப்பத்தை மறைக்க முடியவில்லை.

“என்னை ஒன்றும் கவனிக்காதீர்கள். எனக்கு ஒன்றுமே புரியாது. நான் பாட்டுக்கு இங்கே உட்கார்ந்து கேட்கிறேன்; ஏதேதோ நினைக்கிறேன்.”

“ஆனால், நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்”என்றாள் சோபியா:“ஒரு பெண் அவசியம் சங்கீதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் அவள் துக்கமயமாயிருக்கும் போது...”

அவள் ஸ்வரக் கட்டைகளை அழுத்தி வாசித்தாள்; உடனே அந்தப் பியானோ வாத்தியம், பயங்கரச் செய்தியைக் கேள்விப்பட்டவர்களின் பயபீதியின் ஓலத்தைப்போல் ஒலித்து விம்மியது. இந்தத் திகைப்பூட்டும் ஓலநாதம், அவர் இதயத்தையே உலுக்கிவிட்டது. அதற்கு எதிரொலி செய்வது போல் பயபீதி நிறைந்த இளங்குரல்கள் துள்ளிவந்து, ஓடி