பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

283


அவள் சொல்வதை அவர்கள் அமைதியுடன் கேட்டார்கள். மிருகத்தைப் போல் மதிக்கப்பட்டு நடத்தப்பட்ட அவளது வாழ்க்கையில், தனக்கு நேர்ந்த துயரங்களையும் கொடுமைகளையும் பொறுமையோடு சகித்துத் தாங்கிய அவளது வாழ்வில் பாடாடோபமோ அலங்காரமோ அற்ற அவளது எளிய வாழ்க்கையின் பின்னணியிலே மறைந்துள்ள யதார்த்தமான அர்த்த பாவத்தை அவர்கள் உணர்ந்து உணர்ச்சி வசப்பட்டார்கள். அவள் மூலம் ஆயிரக்கணக்கான ஜீவன்கள் பேசுவது போலிருந்தது. அவள் வாழ்ந்ததெல்லாம் எளிய வாழ்வு, சர்வ சாதாரண வாழ்வு. இந்த உலகிலுள்ள எண்ணிறந்த பெரும்பான்மை மக்களது வாழ்வைப் போன்ற சாதாரண வாழ்வு. அவளது வாழ்க்கைக் கதை அந்த வாழ்வுக்கு ஒரு உதாரணம் ஒரு அறிகுறி, நிகலாய் தனது முழங்கைகளை மேஜைமீது ஊன்றி, மோவாயைக் கைகளில் தாங்கியவாறு கண்களைச் சுருக்கி, கண்ணாடி வழியாக அவளைக் கூர்ந்து கவனித்தான். சோபியா, நாற்காலியில் சாய்ந்து இடையிடையே நடுங்கிக்கொண்டாள், தலையையும் உலுப்பிக்கொண்டாள். அவளது முகம் மெலிந்து வெளுத்துப்போனது போலத் தோன்றியது. அவள் சிகரெட்டும் பிடிக்கவில்லை.

“ஒரு காலத்தில் நான் என்னையே துர்ப்பாக்கியசாலி என்று கருதினேன்” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு, அமைதியாகச் சொன்னாள் சோபியா. “என்னுடைய வாழ்க்கையே ஒரு ஜன்னி மயக்கம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னை ஒரு சிறு நகரத்திற்கு கடத்தப்பட்டிருந்த காலம். அந்தச் சமயத்தில் என்னைப் பற்றி நினைப்பதைத் தவிர, எனக்கு வேண்டியதைக் கவனிப்பதைத் தவிர, வேறு சிந்தனையோ செயலோ கிடையாது. ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பால், நான் எனது துன்பங்களைக் கணக்கிட்டுப் பார்த்தேன். என்னை மிகவும் நேசித்த தந்தையோடு சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன்; என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றினார்கள்; என்னை ஒரு அவமானச் சின்னமாகக் கருதினார்கள். நான் சிறையிலும் தள்ளப்பட்டேன். எனது நெருங்கிய தோழன் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுத்தான். என் கணவர் கைதாகி, நான் சிறைக்குள் போய் மீண்டும் நாடு கடத்தப்பட்டேன், பிறகு கணவரின் மரணமும் சம்பவித்தது. இந்த உலகிலேயே நான்தான் மிகவும் துர்ப்பாக்கியமானவள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால், என்னுடைய சகல துர்பாக்கியங்களும்–அதைவிடப் பத்துமடங்கு அதிகமான துர்பாக்கியங்களும்கூட, உங்களுடைய ஒருமாத வாழ்க்கைக்குச் சமமாகாது, பெலகேயா நீலவ்னா! உங்கள் துர்ப்பாக்கியமோ அன்றாடச் சித்திரவதை: ஆண்டாண்டுதோறும்