பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

13


"ஆனால், நீ மட்டும் குடிக்காதே” என்று சொன்னாள் அவள்.

“உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார், அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய்மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?”

துக்கமான இந்த இனிய வார்த்தைகளைக் கேட்டதும், தந்தை உயிரோடிருந்த காலத்தில் வீட்டிலிருப்பதே தெரியாது. எப்போதும் மெளனமாய், அடிக்குப் பயந்து சாகும் துயர வாழ்வையே தன் தாய் வாழ்ந்து வந்தாள் என்பது பாவெலுக்கு ஞாபகம் வந்தது. தன் தந்தையைச் சந்திக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக. பாவெலும் எப்போதும் வீட்டை விட்டு வெளியேதான் திரிந்துகொண்டிருந்தான். எனவே அவன் தன் தாயிடம் கூட அதிகமாகப் பழகியதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு அறிவு தெளியத் தெளிய அவன் தன் தாயை ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தான்.

அவள் உயரமாக இருந்தாள். எனினும் ஓரளவு கூனிப் போயிருந்தாள். ஓயாத உழைப்பினாலும், கணவனின் அடி உதைகளாலும் உடைந்து கலகலத்துப்போன அவளது உடம்பு அரவமே செய்யாமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தே நடமாடியது. எதனோடாவது மோதிவிடுவோமோ என்ற அஞ்சி நடப்பதைப் போலத் தோன்றியது. அகன்று நீள வட்டமாக இருந்த அவளது முகம் உப்பியதாய், சுருக்கம் கண்டு போயிருந்தது. அந்த முகத்தில் குடியிருப்பிலுமுள்ள பெரும்பான்மையான பெண்களுக்கிருப்பதுபோலவே பயபீதியும் சோகமும் தோய்ந்து படிந்த இருண்ட இரு கண்கள் ஒளி செய்து கொண்டிருந்தன. அவளது வலது புருவத்துக்கு மேலாக ஒரு ஆழமான வடு தெரிந்தது. அந்த வடுவினால், அவளது புருவம் ஓரளவு உயர்ந்து போயிருந்தது இதனால் அவளது வலது செவியும் இடது செவியைவிட ஓரளவு உயர்ந்து போய்விட்டதுபோல் பிரமை தட்டியது. இதனால், அவள் எப்போதுமே ஒரு பயங்கரச் செய்தியைக் கேட்டு அஞ்சுவது போலத் தோன்றியது. அவளது அடர்ந்த கரிய கூந்தலில் ஒன்றிரண்டு நரை மயிர்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவள் இதமும், சோகமும் பணிவுமே உருவாக இருந்தாள்......

அவளது கன்னங்களின் வழியே கண்ணீர் மெதுவாக வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

“அழாதே!” என்று அவளது மகன் அமைதியாகச் சொன்னான். “எனக்கு இன்னும் கொஞ்சம் குடிக்கக் கொண்டா!”

“உனக்கு நான் கொஞ்சம் ஐஸ் போட்ட தண்ணீர் கொண்டு வருகிறேன்”.