பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

மக்சீம் கார்க்கி


தஸ்தாவேஜுகளோடு எத்தனை எத்தனையோ பெயர்களில் வாழ்ந்திருக்கிறாள். அவள் மாறு வேடம் பூண்டு, உளவாளிகளிடமிருந்து தப்பியிருக்கிறாள். விரோதமான புத்தகங்களை கட்டுக்கட்டாக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்றிருக்கிறாள். நாடு கடத்தப்பட்டவர்களைத் தட்பித்து ஓடச் செய்வதிலும் ஒத்துழைத்திருக்கிறாள், அவர்களோடு வெளி நாடுகளுக்கு துணையாகவும் சென்று சேர்த்திருக்கிறாள். ஒரு தடவை அவள் தான் குடியிருந்த வீட்டுக்குள்ளேயே ஒரு இரகசிய அச்சகத்தை வைத்திருந்தாள்; போலீஸ்காரர்கள் அதைக் கண்டுபிடித்து, வீட்டைச் சோதனையிட வந்தபோது, அவள் தன்னை ஒரு வேலைக்காரி மாதிரி வேடமிட்டு மறைந்துகொண்டு தன் வீட்டு வாசலில் வந்து நின்ற போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தன்னை இனங்காட்டாமல் ஓடி மறைந்து தப்பிவிட்டாள். அன்றைய தினம் ஒரே குளிர். அவளோ மெல்லிய ஆடைகளைத்தான் அணிந்திருந்தாள். தலைமீது ஒரு சவுக்கத்தைப் போட்டவாறு. அவள் அந்தப் பெரிய நகரத்தின் எல்லை வரைக்கும் நடந்துசென்றாள்; கையில் ஒரு டப்பாவைத் தூக்கிக்கொண்டு மண்ணெண்ணெய் வாங்கச் செல்கிறவள்போல் சென்று நழுவித் தப்பிவிட்டாள்.

இன்னொரு தடவை அவள் சில தோழர்களைச் சந்திப்பதற்காக, ஒரு நகரத்துக்குள் வந்து சேர்ந்தாள்; அவர்கள் தங்கியிருந்த மாடிக்குச் செல்லும் சமயத்தில், படியில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, மாடியில் சோதனை நடக்கிறது என்பதைக் கண்டுகொண்டாள், திரும்பவும் கீழே இறங்கித் தப்பித்துச் செல்வதற்கு அவளுக்கு நேரமில்லை. எனவே அவள் ஒரு மாடியின் கீழே இருந்த வீட்டுக் கதவைத் துணிந்து தட்டினாள், உள்ளிருந்தவர்கள் கதவைத் திறந்தவுடன் அவள் விறுவிறு என்று தனது மூட்டை முடிச்சுகளுடன் அந்த இனந்தெரியாத ஜனங்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள். பிறகு அவர்களிடம் பட்டவர்த்தனமாகத் தன். நிலைமையைச் சொன்னாள்.

“நீங்கள் விரும்பினால், என்னைப் போலீசாரிடம் பிடித்துக்கொடுக்கலாம், ஆனால் நீங்கள் அந்த மாதிரி செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை” என்றாள்.

அந்த வீட்டிலுள்ளவர்களோ ரொம்பவும் பயந்துபோய்விட்டார்கள். அன்றிரவு முழுவதும் அவர்களை கண்ணையே இமைக்கவில்லை. எந்த நேரத்திலும் போலீஸ்காரர்கள் தம் வீட்டுக் கதவைத் தட்டக்கூடும் என்று எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் அவளை அவர்கள் வெளியே விரட்டவில்லை. மறுநாள் காலையில் அவர்கள் அனைவரும் தங்களது தீரமிக்க செயலை எண்ணிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.