பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

289


உங்கள் பேச்சையே கேட்கிறேன்; உங்களைப் பற்றியே சிந்திக்கிறேன். நீங்கள் மனித இதயத்துக்குள் புகும் வழியை அறிந்தவர் என்பதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. தன் மனத்திலுள்ள அந்தரங்கத்தையெல்லாம் உங்களிடம் எவனும் மறைக்காது சொல்லிவிடுவான். அவன் தானாகவே தன் இதயத்தை உங்களிடம் திறந்து காட்டிவிடுவான். என் மனதில் ஒரு எண்ணம் உண்டாகிறது. உங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வாழ்வின் துன்பத்தையெல்லாம் ஒரு நாள் வெற்றி கண்டே தீருவார்கள். அது மட்டும் நிச்சயம்!”

“நாங்கள் வெற்றிபெறுவது நிச்சயம்: ஏனெனில், நாங்கள் தொழிலாளி மக்களோடு ஒன்று சேர்ந்து நிற்கிறோம்” என்ற உறதியாகவும், உரத்தும் கூறினாள் சோபியா. “அவர்களிடம் ஒரு மகா சக்தி மறைந்துகிடக்கிறது; அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் அவர்களை உணரச் செய்ய வேண்டியதே முக்கியம், அதை உணர்ந்துவிட்டால் அவர்கள் உடனே சுதந்திரமாகத் தாமே வளர்ச்சி பெறத் தொடங்குவார்கள்......”

அவளது பேச்சு தாயின் இதயத்திலே பற்பல உணர்ச்சிக் கலவைகளை உண்டாக்கியது. ஏதோ ஒரு காரணத்தால், அவள் சோபியாவுக்காக நட்புரிமையோடும், மனத்தாங்கலில்லாத ஒரு அனுதாபத்தோடும் வருத்தப்பட்டாள்; இம்மாதிரியே அவள் எளிய வார்த்தைகளை, புரியும் வர்த்தைகளையே மேன்மேலும் பேச வேண்டுமெனத் தாய் விரும்பினாள்.

“உங்களது சிரமங்களுக்கெல்லாம் பலனளிக்கப் போவது யார்?” என்று அமைதியுடனும் வருத்தத்துடனும் கேட்டாள் தாய்.

“நமக்கு ஏற்கெனவே விருது கிடைத்துவிட்டது” என்றாள் சோபியா. அந்த வார்த்தைகள் பெருமிதத்தோடு ஒலிப்பதாய்த் தாய்க்குத தோன்றியது. “நாங்கள் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையைக் கண்டுபிடித்திருக்கிறோம்; அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது. நமது இதயங்களின் பரிபூரண சக்திகளோடு நாம் வாழ்கிறோம். வாழ்க்கையில் நாம் இதைவிட வேறு என்னதான் எதிர்பார்ப்பது?”

தாய் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, கண்களைத் தாழ்த்திக்கொண்டு மீண்டும் சிந்தித்தாள்:

“மிகயீலுக்கு இவளைப் பிடிக்காது”

அந்த இனிய காற்றை நெஞ்சு நிறையச் சுவாசித்தவாறு அவர்கள் விரைவாக ஆனால் அவசரமின்றிச் சென்றார்கள். தான் ஏதோ ஒரு புண்ணிய யாத்திரை செல்வது போலத் தாய்க்குத் தோன்றியது.