பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

மக்சீம் கார்க்கி


"ஓ! என்னவெல்லாம் நடந்துவிட்டது” என்று அவள் கத்தினாள்; “அவர்கள் மக்களை அடித்தார்கள், வெட்டினார்கள்....”

“நானும் பார்த்தேன்” என்று கூறிக்கொண்டே, அவளுக்கு ஒரு கோப்பை ஒயினைக் கொடுத்தான் நிகலாய். “இருதரத்தாருமே தங்கள் மூளையைக் கொஞ்சம் பறிகொடுக்கத்தான் செய்தார்கள். ஆனால் நீங்கள் அதை எண்ணி அலட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் தங்கள் கத்திகளின் பின் புறத்தால்தான் தாக்கினார்கள். ஒரே ஒருவனுக்குத்தான் படுகாயம் ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதையும் அவர்கள் என் கண்முன்னாலேயே செய்தார்கள். நான் அவனைக் கூட்டத்தைவிட்டு வெளியே இழுத்து வந்துவிட்டேன்.”

நிகலாயின் குரலாலும் அந்த அறையின் வெதுவெதுப்பாலும் வெளிச்சத்தாலும் தாயின் உள்ளம் ஓரளவு அமைதி கண்டது. நன்றி உணர்வோடு அவனைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.

“அவர்கள் உங்களையும் தாக்கினார்களா?”

“இது என்னால்தான் விளைந்தது. நான்தான் அஜாக்கிரதையாய் என் கையை எதன் மீதோ ஓங்கி மோதிவிட்டேன். அதனால், அந்த அடி என் கைச் சதையைப் பிய்த்தெறிந்துவிட்டது. சரி. கொஞ்சம் தேநீர் குடியுங்கள். வெளியே ஒரே குளிர். நீங்களும் மெல்லிய உடைகள்தான் அணிந்திருக்கிறீர்கள்.”

அவள் கோப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள்: அப்போது தனது கைவிரல்களில் காய்ந்துபோன ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டாள். தன்னையறியாமலே அவள் கையை தன் மடிமீது தளரவிட்டாள். அவளது உடுப்பு ஒரே ஈரமாயிருந்தது. அவள் தன் புருவங்களை நெரித்து உயர்த்திக் கண்களை அகலத்திறந்து, தனது கை விரல்களையே பார்த்தாள். அவளது இதயம் படபடத்தது, கண்கள் இருண்டு மயக்க உணர்ச்சி ஏற்பட்டது.

“பாவெலுக்கு கூட—அவர்கள் அவனுக்கும் இப்படித்தான் செய்யக்கூடும்!”

இவான் தனீலவிச் தனது சட்டைக் கைகளைத் திரைத்துச் சுருட்டியவாறே அந்த அறைக்குள் வந்தார். வந்த விஷயத்தைக் கேட்பதற்காக வாய்பேசாமல் ஏறிட்டு நோக்கிய நிகலாயைப் பார்த்து உரத்த குரலில் பேசினார் அவர்:

“முகத்திலுள்ள காயம் ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால், அவனது மண்டையெலும்பு நொறுங்கியிருக்கிறது. படுமோசமாக இல்லை. இவன் ஒரு பலசாலியான பையன், இருந்தாலும், நிறைய