பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/406

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

மக்சீம் கார்க்கி


அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக்கொண்டு ரத்தம் தோய்ந்த தனது ஒரு கரத்தை உயர்த்திக் காட்டினான்.

“இதோ என் ரத்தம் -சத்தியத்தைக் காப்பதற்காகச் சிந்திய ரத்தம்!”

தாயும் படியிறங்கி அந்த முகப்புக்குச் சென்றாள். ஆனால் கூட்டத்தின் மத்தியில் நின்ற ரீபினை அவளால் பார்க்க முடியவில்லை. எனவே மீண்டும் அவள் படிகளின் மீது ஏறி நின்றுகொண்டாள். ஏதோ ஒரு மங்கிய ஆனந்தம் அவளது இதயத்தில் படபடத்தது.

“விவசாயி மக்களே! அந்தப் பத்திரிகைகளை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருங்கள். அவற்றைப் படியுங்கள்.

கோயில் குருக்களும், அதிகாரிகளும் உண்மையைச் சொல்லும் எங்களை மாபாவிகள் என்றும், கலகக்காரர்கள் என்றும் உங்களிடம் சொல்வார்கள். அதை நம்பாதீர்கள், உண்மை இந்த உலகத்தில் எங்கும் ரகசியமாகவே உலவுகிறது. மக்களது இதயத்திலே குடிபுகுவதற்காகத் திரிந்துகொண்டிருக்கிறது. அதிகாரிகளுக்கே சத்தியம் நெருப்பைப் போன்றது. உயிர் பறிக்கும் உடைவாளைப் போன்றது. அவர்கள் சத்தியத்தை ஏற்க முடியாது. ஏற்றால் சத்தியம் அவர்களை வெட்டித் தள்ளிவிடும்; சுட்டுப் பொசுக்கிவிடும்! உங்களுக்கோ சத்திய தேவதை உண்மையான நல்ல தோழியாக விளங்குவாள்; அவர்களுக்கோ அவள் பரம விரோதியாக விளங்குவாள். எனவேதான் அவள் இந்தப் பூமியில் ரகசியமாக உலவித் திரிகிறாள்!”

மீண்டும் அந்த ஜனக் கூட்டத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.

“கேளுங்கள், விசுவாசிகளே!”

“ஆ. சகோதரா! அவர்கள் இதற்காக உன்னைத் தண்டிப்பார்களே!”

“உன்னைக் காட்டிக் கொடுத்தது யார்?”

“தேவாலய மத குரு!” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

இரண்டு முஜீக்குகள் வெஞ்சினத்தோடு கருவினார்கள்:

“அங்கே பாருங்கடா, பயல்களா!” என்று யாரோ எச்சரிப்பது, காதில் விழுந்தது.

16

போலீசாரின் தலைவன் வந்துகொண்டிருந்தான். உருண்டை முகமும், கனத்த சரீரமும், நெடிய உருவமும் கொண்டவனாக இருந்தான் அவன். அவன் அணிந்திருந்த தொப்பி காது பக்கமாக நீண்டு கொண்டிருந்தது, மீசையின் ஒரு புறம் மேல் நோக்கித் திருகி நின்றது. மறுமுனை கீழ் நோக்கி வளைந்திருந்தது. எனவே அவனது தோற்றமே