பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/414

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

மக்சீம் கார்க்கி


தாய் தனது கண்ணால் அவனை ஒரு முறை அளந்து பார்த்தாள்; உள்ளே போவதற்கு வசதியான நேரத்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தாள். அந்த முஜீக்கின் முகம் அழகாகவும் சிந்தனை நிரம்பியதாகவும் இருந்தது. அவனது கண்களில் சோக பாவம் ததும்பியது. அவன் நெடிய உருவமும் அகன்ற தோள்களும் உடையவனாயிருந்தான், ஒரு சுத்தமான துணிச் சட்டையும் சட்டைக்கு மேல் ஏகப்பட்ட ஓட்டுக்களுடன் கூடிய ஒரு கோட்டும், கபில நிறமான முரட்டுக் கால் சராயும், வெறும் கால்களில் செருப்புக்களும் அணிந்திருந்தான்.

இனத் தெரியாத காரணத்தால் தாய் நிம்மதியோடு ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள். தட்டுத் தடுமாறும் தனது சிந்தனைகளையும் முந்திக்கொண்டு உந்தி வரும் ஓர் உணர்ச்சியால் அவள் திடீரெனப் பேசினாள்.

“இன்றிரவு நான் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பாயா?”

அந்தக் கேள்வி அவளுக்கே எதிர்பாராத சொல்லாக ஒலித்தது. அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே அவளது உடல் முழுவதும் திடீரென இறுகுவதுபோல் இருந்தது. அவள் நிமிர்ந்து நின்று அந்த மனிதனை உறுதியோடு அசைவற்றுப் பார்த்தாள். என்றாலும் பின்னி முடியும் சிந்தனைகள் அவளது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தன.

“நான்தான் நிகலாய் இவானவிச்சின் அழிவுக்குக் காரணமாயிருப்பேன். பாவெலையும் நான் ரொம்ப காலத்துக்குப் பார்க்கவே முடியாது. அவர்கள் என்னை அடிக்கத்தான் போகிறார்கள்!”

அந்த முஜீக் அவசரம் ஏதுமில்லாமல், தரையை நோக்கியவாறே தனது கோட்டை இழுத்து விட்டுக்கொண்டு நிதானமாகப் பதில் சொன்னான்:

“இரவு தங்குவதற்கா? ஏன் தரமாட்டான்? என் வீடு ஒரு சின்ன ஏழைக் குடில். அவ்வளவுதான்.”

“நல்ல வீடுகளில் இருந்து எனக்குப் பழக்கமேயில்லை” என்றாள் தாய்.

“அப்படியென்றால் சரி” என்று கூறிக்கொண்டே அந்த முஜீக் தலையை உயர்த்தி மீண்டும் தன் கண்களால் அவளை அளந்து நோக்கினான். ஏற்கெனவே இருண்டுவிட்டது. அவனது தோற்றத்தில் இருளின் சாயை படிந்திருந்தது. அவனது கண்கள் மங்கிப் பிரகாசித்தன்; முகம் அந்தி மயக்க மஞ்சள் வெயிலால் வெளிறித் தோன்றியது.