பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/416

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

மக்சீம் கார்க்கி


எடுத்துப்பார்த்துவிட்டு அதைத் தட்டிலேயே வைத்துவிட்டாள். மீண்டும் அவளுக்கு அந்தக் கிறக்க உணர்ச்சி ஏற்பட்டது. அவளால் சாப்பிடக் கூட முடியவில்லை. அவளது உடம்பு குதுகுதுத்துக் காய்ந்து உடலை பலவீனப்படுத்தியது, அந்தக் காய்ச்சல் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை இழுத்து நிறுத்தி, அவளைக் கிறக்கச் செய்தது. அவளுக்கு முன்னால், அந்த நீலக்கண் முஜீக்கின் முகம் தெரிந்தது. ஆனால் அந்த முகம் பரிபூரணமாகத் தோன்றவில்லை. அதைக் கண்டவுடன் அவநம்பிக்கை உணர்ச்சி மேலிட்டது. அவன் தன்னைக் கைவிட்டுவிடுவான் என்று எண்ணிப் பார்க்க அவள் விரும்பவில்லை. இருந்தாலும் அந்த எண்ணம் அவள் மனத்தில் எப்போதோ குடிபுகுந்துவிட்டது. அவளது இதயத்தை ஒரு பளு அழுத்தியது.

“அவன் என்னைக் கவனித்தானே. கவனித்துப் பார்த்து, ஊகித்துக் கொண்டானே” என்று அவள் லேசாகச் சிந்தித்தாள்.

அந்த எண்ணம் வளரவில்லை. கிறக்க உணர்ச்சியிலும் குழப்ப உணர்ச்சியிலும் அந்த எண்ணம் மூங்கிமுழ்கிப் போய்விட்டது. ஜன்னலுக்கு வெளியே முன்னிருந்த இரைச்சலுக்குப்பதில் இப்போது ஆழ்ந்த அமைதி நிலவியது. அந்த அமைதி அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றி வட்டமிடும் பயவுணர்ச்சியையும் பாரவுணர்ச்சியையும் பிரதிபலித்துக் காட்டியது. தனிமை உணர்ச்சி பெருகியது. சாம்பலைப்போல் நிறம் கறுத்த ஒர் அந்தி மயக்கத்தை இதயம் முற்றிலும் பரப்பியது.

மீண்டும் அந்த யுவதி வாசல் நடையில் தோன்றினாள்.

“நான் உங்களுக்குப் பொரித்த முட்டை கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“சிரமப்படாதே. எனக்குச் சாப்பிடவே மனமில்லை. அவர்களுடைய கூச்சலும் கும்மாளமும் என்னைப் பயமுறுத்தி விட்டுவிட்டன.

அந்தப் பெண் மேஜையருகே வந்து ரகசியமாக உத்வேகம் நிறைந்த குரலில் பேசினாள்.

“அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நீங்கள் அதைப் பார்த்திருக்க வேண்டும். நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. அவன் குபுக்கென்று ரத்தம் கக்கினான். கரிய சிவந்த கட்டியான ரத்தம்! அவனது கண்கள் வீங்கிப்போய் மூடிவிட்டன. அவன் ஒரு தார் எண்ணெய்த் தொழிலாளி. அந்தப் போலீஸ்