பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/438

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

மக்சீம் கார்க்கி


என்று உணர்ந்த பிறகும் அந்த வாழ்க்கையில் என்னால் கால்தரித்து நிற்க முடியாது.”

அவளது பசிய பண்கள் வறண்ட பிரகாசத்திலும், மெலிந்த முகத்திலும், அவளது குரலின் தொனியிலும் தோன்றிய வேதனையைத் தாயால் உணர முடிந்தது: அவளைத் தழுவி ஆசுவாசப்படுத்தி ஆறுதலளிக்க விரும்பினாள் தாய்.

“அடி, பெண்ணே! என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிகிறதே.....”

“ஆனால் எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டும்” என்று குறுக்கிட்டாள் தத்யானா. “சரி, படுக்கை தயாராகிவிட்டது.”

அவள் மீண்டும் அடுப்பருகே சென்று, அங்கே சிந்தனை வயப்பட்டு மெய்மறந்து ஆடாமல் அசையாமல் அமைதியாக நிமிர்ந்து நின்றாள். தாய் தன் உடையைக்கூடக் கழற்றாமல் அப்படியே படுத்துக்கொண்டாள். அவளது எலும்புகள் அசதியினால் வலித்தன; அவள் லேசாக முனகினாள். தத்யானா விளக்கை இறக்கி அணைத்தாள். அறை முழுவதும் இருள் பரந்து கவிந்த பின்னர் அவள் நிதானமாகத் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த இருட் படலத்திலிருந்து எதையோ துடைத்தெடுப்பதுபோல அவள் பேச்சு ஒலித்தது.

“நீங்கள் பிரார்த்திப்பதாகத் தோன்றவில்லையே. நானும் கடவுள் ஒருவர் இருப்பதாக நம்பவில்லை. அற்புத லீலைகளிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.”

தாய் நிலைகொள்ளாமல் பெஞ்சின் மீது புரண்டு படுத்தாள். ஆழங்காண முடியாத அந்த இருட்டிலும் ஜன்னலின் வழியாக அவளை நோக்கி வாய்திறந்து கொட்டாவி விட்டது. மங்கிய சப்தங்கள் இருளின் ஊடாகத் தவழ்ந்து வந்தன, அவள் பயத்தோடு ரகசியம் போலப் பேசினாள்.

“கடவுளைப் பொறுத்தவர—எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் நான் கிறிஸ்துவை நம்புகிறேன். அவரது வாசகத்த— ‘அயலானையும் உன்னைப்போல் நேசி’ என்ற வாசகத்தை—நான் நம்புகிறேன்.”

தத்யானா மெளனமாக இருந்தாள். அடுப்பின் இருண்ட புகைட் புலத்திலே அவளது மங்கிய உருவத்தைத் தாயால் காண முடிந்தது. அவள் அசைவற்று நின்றுகொண்டிருந்தாள். தாய் துயரத்தோடு கண்களை மூடிக்கொண்டாள். திடீரென்று அந்தப் பெண்ணின் கசப்பான குரல் ஒலித்தது: