பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/445

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

429


என்றுமே அவனை அவள் பார்த்ததில்லை; அவனது தோற்றம் அவளை பயமுறுத்தியது.

அவள் பேசி முடிந்தபிறகு அவன் எழுந்து தனது முஷ்டிகளைப் பைகளுக்குள் அழுத்தி ஊன்றியவாறு கீழும் மேலும் நடந்தான்.

“அவன் ஒரு மகா புருஷனாய்த் தானிருக்கவேண்டும்” என்று பற்களை இறுகக் கடித்தவாறே அவன் முணுமுணுத்தான். “சிறையில் இருப்பது அவனுக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும், அவன் போன்ற ஆட்களுக்கு அது சிரமம்தான்.”

அவன் தனது முஷ்டிகளை அழுத்தியவாறே தனது உணர்ச்சி வேகத்தைத் தணித்துப் பார்த்தான். எனினும் அவனது நிலைமையைத் தாய் உணர்ந்துகொண்டாள்; அது தாய்க்குத் தானாகவே தெரிந்தது. அவன் தன் கண்களைச் சுருக்கினான்; கண்கள் கத்தி முனையைப்போல் நீண்டு சுருங்கின. மீண்டும் அவன் மேலும் கீழும் நடந்தவாறே அடங்கிக் குமுறும் கோபத்தோடு பேசத் தொடங்கினான்.

“இந்தப் பயங்கரத்தை எண்ணிப்பாருங்கள். ஜனங்களின் மீது தமக்குள்ள ஆதிக்கத்தை நிலை நிறுத்தவேண்டும் என்ற வெறியுணர்ச்சியில், ஒரு சில அயோக்கிய நபர்கள் ஒவ்வொருவரையும் உதைக்கிறார்கள்; நெரிக்கிறார்கள்; நசுக்குகிறார்கள். காட்டு மிராண்டித்தனம் பெருகி வருகிறது; கொடுமையே வாழ்க்கையின் நியதியாகி விடுகிறது! இதைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அவர்களில் சிலர் ஜனங்களை அடித்து நொறுக்கி, மிருகங்களைப்போல் நடந்துகொள்கிறார்கள். ஏனெனில் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சித்ரவதை செய்வதில் அவர்கள் மோகவிகாரம் கொண்டு திரிகிறார்கள். அடிமைகளின் அடங்காத பைத்திய வெறியைப் பயன்படுத்தி, அந்த அடிமை மக்களின் அடிமை உணர்ச்சிகளையும், மிருக குணங்களையும் அவற்றின் பரிபூரண வேகத்தோடு பாய்ந்து குதறும்படி அவிழ்த்துவிட்டு விடுகிறார்கள். வேறுசிலர் பழிக்குப்பழி வாங்கும் விஷ ஆசைக்கு ஆளாகிறார்கள். தாம் வாங்கிய அடி உதைகளால் ஊமையாகவும் செவிடாகவும் போகிறார்கள், சிலர். மக்கள் குலத்தையே சீர்குலைத்துவிட்டார்கள்!”

அவன் பேச்சை நிறத்திவிட்டு மௌனமாகப் பற்களைக் கடித்தான்.

“இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது!”

அவன் தன் உத்வேகத்தை அடக்கியாண்டவாறே அழுதுகொண்டிருந்த தாயின் பக்கமாக அமைதியோடு திரும்பி, தனது கண்களில் பிரகாசிக்கும் நிலையான ஒளியோடு அவளைப் பார்த்தான்.