பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/464

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

மக்சீம் கார்க்கி


அந்த மனித உருவத்தை அவர்கள் கண்டார்கள். தாடியற்ற கன்னத்தைப் புடைக்கச் செய்யும் பலத்த இருமலோடு அவன் இருமியவாறு துப்பினான். பிறகு தன் விருந்தாளிகளைப் பார்த்து வரவேற்றான்.

“உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.”

“இதோ, இவனையே கேள்” என்று சொன்னான் நிகலாய்.

“என்னை என்ன கேட்கிறது?”

“சிறையிலிருந்து தப்புவது பற்றி.”

“ஆஹா!” என்று அந்தத் தகரத் தொழிலாளி சொல்லிவிட்டுத் தனது கறைபடிந்த விரல்களால் மீசையைத் தடவிவிட்டுக்கொண்டான்.

“யாகவ் வசீலியவிச்! அது எவ்வளவு சுலபமான காரியம் சொன்னால், இவள் நம்பமாட்டேன் என்கிறாள்.”

“நம்பவில்லையா? ஹும்! அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை என்றுதான் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும் விருப்பம் இருக்கிறது; அதனால், நாம் இதை நம்புகிறோம்!” என்று அமைதியாகச் சொன்னான் அவன். திடீரென்று அவன் முதுகைக் குனிந்து இருமத் தொடங்கினான். அந்தத் தொண்டைப் புகைச்சல் ஓய்ந்து அடங்கியதும், அவன் தன் நெஞ்சைக் கையால் தடவிக் கொடுத்தவாறே அறையின் மத்தியிலேயே நின்று, தனது முண்டகக் கண்களால் தாயையே கவனித்துப் பார்த்தான்.

“பாவெலும் அவனது தோழர்களும் இந்த விஷயத்தைத் தீர்மானிப்பார்கள்” என்றாள் தாய்.

நிகலாய் ஏதோ சிந்தித்தவாறே தலையைத் தொங்கவிட்டான்.

“யார் அது பாவெல்?” என்று கேட்டுக்கொண்டே ஓர் இடத்தில் அமர்ந்தான் அந்தத் தொழிலாளி.

“என் மகன்.”

“அவன் முழுப் பெயர்?”

“பாவெல் விலாசவ்.”

அவன் தலையை அசைத்தான்; புகைக் குழாயை எடுத்து அதில் புகையிலையை நிரப்பத் தொடங்கினான்.

அவனைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் அவன். “என் மருமகனுக்கு அவனைத் தெரியும். என் மருமகனும் சிறையில்தான் இருக்கிறான். அவன் பெயர் எவ்சென்கோ, கேள்விப்பட்டிருக்கிறாயா? என் பேர் கோபுன். அவர்கள் போகிற போக்கிலே கூடிய சீக்கிரத்தில் ஊரில் இருக்கிற இளைஞர்களை எல்லாம் பிடித்துச் சிறையில்