பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/474

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

மக்சீம் கார்க்கி


தாய் அவளது வார்த்தைகளைக் கவனத்தோடு காதில் வாங்கிக் கொண்டாள்: எனினும் அவளுக்கு அவற்றில் எதுவுமே புரியவில்லை, ஏனெனில் அவள் மனத்தில் சுற்றிச் சுற்றி மாறி மாறியெழுந்த ஒரே சிந்தனை இதுதான்.

“விசாரணை - அடுத்தவாரம்!”

ஏதோ ஓர் இனந்தெரியாத மனிதத்துவம் அற்ற சக்தி நெருங்கி வருவதாக திடீரென அவள் மனத்தில் தட்டுப்பட்டது.

23

திகைப்பும் சோர்வும் கவிந்து சூழ்ந்த மனத்தோடு தாய் மேலும் இரண்டு நாட்கள்வரை பளு நிறைந்த சோகத்துடன் காத்திருந்தாள். மூன்றாவது நாளன்று சாஷா வந்தாள்; நிகலாவிடம் பேசினாள்.

“எல்லாம் தயார். இன்று ஒரு மணிக்கு.......”

“அவ்வளவு சீக்கிரமா?” என்று அதிசயித்துக் கேட்டான் அவன்.

“ஏன் கூடாது? ரீபினுக்காகத் துணிமணிகள் தேட வேண்டியதும், அவன் போயிருக்க ஒர் இடம் தேடுவதும்தான் பாக்கி, மற்றதையெல்லாம் கோபுனே செய்துமுடித்துவிடுவதாகச் சொல்லிவிட்டான். ரீபின் ஒரே ஒரு தெருவை மட்டும்தான் கடந்து வரவேண்டும். உடனே மாறுவேடத்தில் இருக்கும் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் அவனைச் சந்தித்து, அவன் மீது ஒரு கோட்டைப் போட்டு மூடி, தலையிலே ஒரு தொப்பியையும் வைத்து, அவனை கூட்டிக்கொண்டு போய்விடுவான். நான் சகல துணிமணிகளோடும் காத்திருப்பேன். அவன் வந்ததும் அழைத்துக்கொண்டு போவேன்.”

“பரவாயில்லை. சரி, ஆனால், கோபுன் என்பது யார்?” என்று கேட்டான் நிகலாய.

“உங்களுக்கு அவனைத் தெரியும். அவனுடைய அறையில்தான் நீங்கள் யந்திரத் தொழிலாளிகளுக்கு வகுப்பு நடத்தினீர்கள்.”

“ஆமாம், ஞாபகமிருக்கிறது. அவன் ஒரு தினுசான ஆசாமி.”

“அவன் ஓர் ஓய்வூதியம் பெறும் சிப்பாய், ஒரு தகரத் தொழிலாளி. அவனுக்கு அறிவு வளர்ச்சி காணாதுதான். என்றாலும் எந்த பலாத்காரத்தையும் அவன் முழு மூச்சோடு எதிர்ப்பவன்.... அவன் ஒரு தினுசான தத்துவார்த்தவாதி” என்று கூறிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள் சாஷா. தாய் வாய்பேசாது அவள் கூறியதைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்தில் ஒரு மங்கிய எண்ணம் வளர்ந்தோங்கியது.