பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/536

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

520

மக்சீம் கார்க்கி


ஒரு சிநேகிதன் இருக்கிறான்-சிஸோவ். விசாரணை முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு மன ஆறுதல் பெறுவதற்காகச் சென்று விட்டு வருவதாகக் கூறுவேன். அவனுக்கு ஆறுதல் தேவைதான். அவனது மருமகனும் தண்டனை பெற்றிருக்கிறான். அவனும் நான் சொல்வதையே ஆமோதிப்பான்.”

அவர்கள் நிச்சயம் தனது ஆசைக்கு இணங்குவார்கள் என்று அவள் உணர்ந்தாள்; எனவே அவர்களைச் சீக்கிரம் இணங்க வைக்கவேண்டும் என்பதற்காக அவள் ஆத்திரத்தோடும் அழுத்தத்தோடும் பேசிக்கொண்டே போனாள். கடைசியில் ஒருவழியாக அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

“சரி, துணிந்து போங்கள்” என்று விருப்பமின்றிச் சொன்னான் அந்த டாக்டர்.

லுத்மீலா எதுவும் சொல்லவில்லை. சிந்தனையில் ஈடுபட்டவாறே முன்னும் பின்னும் நடந்துகொண்டுதானிருந்தாள். அவளது முகம் குழம்பி வாடிப்போயிருந்தது. அவளது கழுத்துத் தசைநார்கள் அவளது தலையைக் கீழே சாய்க்காதபடி இறுக்கமாய்த் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. தாய் இதைக் கவனித்துவிட்டாள்.

“நீங்கள் எல்லோரும் என்னைப்பற்றியே கவலைப்படுகிறீர்களே” என்று புன்னகையோடு கூறினாள் தாய்: “நீங்கள் உங்களைப்பற்றித்தான் கவலையே படக்காணோம்!”

“நீங்கள் சொல்வது உண்மையல்ல” என்றான் அந்த டாக்டர். “நாங்கள்ங்க ளைப்பற்றியும் கவலைப்படுகிறோம். அது எங்கள் கடமை. ஆனால் ஒன்றுமற்ற காரியத்துக்காக, தங்கள் சக்தியை விரயம் செய்பவர்களிடம்தான் நாங்கள் கடுமையாக நடந்து கொள்கிறோம். சரி போகட்டும். பேச்சின் நகல் பிரதிகள் நீங்கள் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்கு வந்து சேரும்......”

அவன் அவளுக்கு அந்தக் காரியத்தை எப்படியெப்படிச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூறினான். பிறகு அவளது முகத்தையே கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.

“சரி, உங்களுக்கு அதிருஷ்டம் உண்டாகட்டும்!”

ஆனால் அவன் வெளியே செல்லும்போது அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை பிரதிபலித்தது. லுத்மீலா: தாயை நோக்கினாள்.

“உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும்” என்று அமைதி நிறைந்த சிரிப்போடு சொன்னாள் அவள்.

பிறகு அவள் தாயின் கரத்தை எடுத்துப் பிடித்தாள்; மீண்டும் மேலும் கீழும் உலாவ ஆரம்பித்தாள்.