பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மக்சீம் கார்க்கி


பாதங்கள் பனிப்பாதையில் சறுக்கி மூழ்கின; ஒரே குளிர்; அதிபயங்கரம். இலையுதிர் காலத்துக் காற்றில் குனிந்து கொடுக்கும் தன்னந்தனியாக ஒரு புல்லிதழைப்போல, அவளது உடம்பு முன் நோக்கி வளைந்து குனிந்திருந்தது. அவளுக்கு வலது புறத்தில் சதுப்பு நிலத்திற்கிளைத்தெழுந்த ஒரு ஆரண்யம் நிமிர்ந்து நின்றது. அந்தக் காட்டில் உள்ள நெட்டையான பிர்ச் மரங்களும், மூளியான அஸ்பென் மரங்களும் அபாயக் குரலில் குசுகுசுத்தன. அதற்கும் மேலாக, நகர்ப்புறத்து விளக்குகளில் ஒளி மூட்டம் பளபளத்தது..........

“ரட்சகரே! எம்மீது இரக்கம் காட்டும்’ என்று பயத்தால் நடுங்கிக்கொண்டு முணுமுணுத்தாள் அந்தத் தாய்...

7

பாசி மணிகள் பல சேர்ந்து மாலையாவது போல. நாட்கள் இணைந்திணைந்து வாரங்களாய், மாதங்களாய் மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் பாவெலின் வீட்டில் அவனது நண்பர்கள் கூடினார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்கள் தமக்கு முன்னுள்ள பெரிய படிக்கட்டில் ஒரு படி மேலேறியதாகவும், ஏதோ ஒரு தூர லட்சியத்தை நோக்கிச் சிறிது சிறிதாக உயர்ந்து வருவதாகவுமே தோன்றியது.

பழைய நண்பர்களோடு புதிய நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். விலாசவின் வீட்டிலுள்ள சின்ன அறையைப் பொறுத்தவரை அதுவே ஒரு பெருங்கூட்டம். நதாஷா குளிரால் விறைத்தும் களைத்தும் வந்துகொண்டிருந்தாள்; எனினும் அவள் உற்சாகமாயிருந்தாள். பாவெலின் தாய் அவளுக்குத் தான் சொன்னபடி ஒரு ஜோடிக் காலுறைகள் பின்னிக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் சின்னஞ்சிறு கால்களில் அவளே அதை மாட்டிவிட்டாள். முதலில் நதாஷா சிரித்தாள்; ஆனால், மறுகணமே அவள் சிரிப்பை அடக்கி அமைதியானாள்.

“ஒரு காலத்தில் என்னிடம் மிகவும் பிரியம் கொண்ட தாதி ஒருத்தி இருந்தாள்” என்று மென்மையாய்ச் சொன்னாள் அவள், “எவ்வளவு அதிசயமாயிருக்கிறது பார்த்தீர்களா, பெலகேயா நீலவ்னா? பாடுபடும் மக்கள் துன்பமும் துயரமும் சூதும் வாதும் கொண்ட வாழ்க்கைதான் நடத்துகிறார்கள். எனினும் மற்ற எல்லாரையும் விட அன்பு காட்டுகிறார்கள்..... ” என்று. சொன்னாள். அவள் குறிப்பிட்ட மற்றவர்கள் அவளுக்கு வெகு தூரத்தில், ரொம்ப தூரத்தில் தள்ளிப் போனவர்கள்.