பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

45


வியாபாரம், போலீஸ், உணவுப் பொருள்களின் விலைவாசி மூமூமுதலிய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியே பேசினான். ஆனால் அவன் பேசிய முறையானது எது எல்லாம் பொய்யாகவும் அறிவுக்குப் பொருந்தாததாகவும் முட்டாள்தனமாகவும், அசட்டுத்தனமாகவும், அதே சமயத்தில் பொது மக்களுக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியதாய் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்துகிற மாதிரி இருக்கும். மனிதர்கள் சுகமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு தூர தொலைப் பூமியிலிருந்து வந்தவன் போல், தாய்க்குத் தோற்றம் அளித்தான் அவன். இங்கோ எல்லாமே அவனுக்குப் புதிதாக இருப்பது போலவும், இந்த வாழ்க்கையே அவனுக்குக் கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாதது போலவும் வேறு விதியின்றித்தான் அவன் இங்கு வாழ்ந்துகொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றும். அவன் இந்த வாழ்க்கையை வெறுத்தான், இந்த வாழ்க்கையை மாற்றியமைத்துத்தான் ஆக வேண்டும் என்ற இடையறாத ஆசையை அமைதி நிறைந்த விருப்பத்தை அவனுள்ளத்தில் அந்த வெறுப்புணர்ச்சி வளர்த்து வந்தது போன்றும் அவளுக்குத் தோன்றும். அவனது முகம் மஞ்சள் பாரித்திருந்தது; கண்களைச் சுற்றி அழகிய சிறு ரேகைகள் ஓடியிருந்தன. அவனது குரல் மென்மையாயும் கரங்கள் எப்போதும் கத கதப்பாகவும் இருந்தன. அவன் எப்போதாவது பெலகேயாவுடன் கைகுலுக்க நேர்ந்தால், அவளது கரத்தைத் தனது கைவிரல்களால் அணைத்துப் பிடிப்பான்; அந்த மாதிரியான உபசாரத்தால் அவள் இதயத்தில் இதமும் அமைதியும் பெருகும்.

நகரிலிருந்து வேறு பலரும் இவர்கள் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒல்லியாய் உயரமாய் வெளிறிய முகத்தில் பதிந்த அகன்ற கண்கள் கொண்ட ஒரு பெண்தான் அடிக்கடி வந்துகொண்டிருந்தாள். அவள் பெயர் சாஷா, அவளது நடையிலும். அசைவிலும் ஏதோ ஒரு ஆண்மைக் குணம் படிந்திருப்பதாகத் தோன்றியது. அவள் தனது அடர்த்தியான கறுத்த புருவங்களை ஒரு சேர நெரித்து சுழிப்பாள், அவளது நேர்முகமான மூக்கின் சிறு நாசித் துவாரங்கள் அவள் பேசும்போது நடுநடுங்கிக்கொண்டிருக்கும்.

அவள்தான் முதன் முதலாகக் கூர்மையான குரலில் தெரிவித்தாள்:

“நாம் எல்லாம் சோஷலிஸ்டுகள்!”

தாய் இதைக் கேட்டபோது ஏற்பட்ட பயபீதியால் வாயடைத்துப்போய் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தாள். சோஷலிஸ்டுகள்தான் ஜார் அரசனைக் கொன்றதாக பெலகேயா