பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மக்சீம் கார்க்கி


கேள்விப்பட்டிருந்தாள், அது அவளது இளமைக் காலத்தில் நடந்த விஷயம். தங்களுடைய பண்ணை அடிமைகளை ஜார் அரசன் விடுவித்துவிட்டான் என்ற கோபத்தால் நிலப்பிரபுக்கள் ஜார்மீது வஞ்சம் தீர்க்க உறுதி பூண்டதாகவும், ஜார் அரசனைக் கொன்று தலை முழுகினாலொழியத் தங்கள் தலைமயிரைச் சிரைப்பதில்லை என அவர்கள் சபதம் பூண்டதாகவும். அதனாலேயே அவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைத்து வந்தார்கள். ஆனால் தன்னுடைய மகனான பாவெலும் அவனது நண்பர்களும் தங்களை ஏன் சோஷலிஸ்டுகள் என்று சொல்லிகொள்கிறார்கள் என்பதுதான் பெலகேயாவுக்குப் புரியவே இல்லை.

எல்லாரும் அவரவர் இருப்பிடத்துக்குப் பிரிந்து சென்ற பிறகு, அவள் பாவெலிடம் கேட்டாள்,

“பாஷா! நீ ஒரு சோஷலிஸ்டா?”

“ஆமாம்” என்று அவள் முன்னால் வழக்கம்போல் உறுதியாகவும், விறைப்பாகவும், நின்றவாறே பதில் சொன்னாள் அவன். “எதற்காகக் கேட்கிறாய்?”

அவனது தாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

“உண்மையில் அப்படித்தானா, பாவெல்? ஆனால், அவர்கள் ஜாருக்கு எதிரிகளாச்சே! ஜார் வம்சத்து அரசர்களில் ஒருவரைக்கூட அவர்கள் கொன்றுவிட்டார்களே!”

பாவெல் அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான்; கன்னத்தைக் கையால் தடவிக்கொடுத்துக்கொண்டான்.

“நாங்கள் அந்தமாதிரிக் காரியங்களைச் செய்யத் தேவையில்லை” என்று இளஞ்சிரிப்புடன் பதில் சொன்னான் பாவெல்.

இதன் பின்னர் அவன் அவளோடு அமைதியும் அழுத்தமும் நிறைந்த குரலில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனது முகத்தைப் பார்த்ததும் அவள் தன்னுள் நினைத்துக்கொண்டாள்.

“இவன் தவறேதும் செய்யமாட்டான்; இவனால் செய்ய முடியாது.”

புரியாத பதிற்றுக்கணக்கான புதிய வார்த்தைகளைப் போல், திரும்பத் திரும்ப அடிக்கடி கேட்ட அந்தப் பயங்கர வார்த்தையும், முனை மழுங்கி அவள் காதுக்குப் பழகிப்போயிற்று. ஆனால் சாஷாவை மட்டும் அவளுக்குப் பிடிக்கவே இல்லை; சாஷா வந்துவிட்டால் அவளுக்கு அமைதியின்மையும் எரிச்சலும்தான் உள்ளத்தில் எழுந்து ஓங்கும்.