பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மக்சீம் கார்க்கி


இந்த வெற்றி முழக்கங்களைத் தூர தேசங்களிலுள்ள தமது நண்பர்களை நோக்கி, தங்களையோ தங்கள் மொழியையோ அறியாத, புரியாத நண்பர்களை நோக்கிக் காற்றிலே மிதக்கவிட்டுக் கத்தினார்கள். ஆனால், அந்த இனந்தெரியாத நண்பர்கள் அவர்களது முழக்கங்களைக் கேட்பது போலவும், அவர்களது உற்சாகத்தை உணர்ந்து கொள்வதுபோலவும் இவர்கள் முழுமையாய் நம்புவது போலத் தோன்றியது. “நாம் அவர்களுக்குக் கடிதம் எழுதுவது ஒரு நல்ல காரியம்” என்று ஆனந்த மயமாக ஒளிரும் கண்களோடு பேசினோன் ஹஹோல்; “அப்படி எழுதினால், ருஷியாவிலும் தங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். தங்கள் மதத்தையே நம்பி அதையே பிரச்சாரம் செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தாங்கள் எந்தக் கொள்கையோடு வாழ்கிறார்களோ அதே கொள்கையோடு வாழ்ந்து, தங்களது வெற்றிகளைக் கண்டு களிப்பாடும் தோழர்கள் இருக்கிறார்கள் என்ற விஷயம் அவர்களுக்கும் தெரியவரும்.”

இதழ்களிலே புன்னகை பூத்துச் சொரிய அவர்கள் பிரெஞ்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும், ஸ்வீடன்காரர்களையும் தமது நண்பர்களாகக் கருதிப் பேசுவார்கள்; தங்கள் இதயத்தோடு மிகுந்த நெருக்கம் கொண்ட மக்களாக. தாங்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் மக்களாக அவர்களைக் கருதிப் பேசிக்கொள்வார்கள்: அந்த மக்களின் துன்பத்திலும் இன்பத்திலும் இவர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.

நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது; அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது. அவர்கள் அனைவரையும் ஒன்றாக உருக்கிச் சேர்த்து ஒரே பேராத்மாவாக மாற்றிவிட்டது. இந்த உணர்ச்சி அவளுக்குப் பிடிபடவில்லை என்றாலும் அந்த உணர்ச்சியின் இன்பமும் இளமையின் சக்திவெறியும், நம்பிக்கையும் அவளைத் தளர்ந்துவிடாதபடி தாங்கி நின்றன.

“நீங்கள் இருக்கிறீர்களே!” என்று ஒருமுறை அவள் ஹஹோலிடம் சொன்னாள்; “அனைவரும் உங்களுக்குத் தோழர்கள்! அவர்கள் யூதர்களாகட்டும், ஆர்மீனியர்களாகட்டும், ஆஸ்திரியக்காரராகட்டும் எல்லாரும் உங்கள் தோழர்கள்! அவர்களுக்காக நீங்கள் வருத்தம் அடைகிறீர்கள்; சந்தோஷமும் கொள்கிறீர்கள்!”