பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மக்சீம் கார்க்கி


முக்கியமாக, இந்தப் புதிய பாடல்களில் ஒன்று மட்டும் தாயின் உள்ளத்தை மிகவும் கவர்ந்து கிளறிவிட்டது. சந்தேகமும் நிச்சயமின்மையும் கொடிபோல் பின்னிப் பிணைந்து இருண்டு மண்டிக்கிடக்கும் ஒரு பாதையிலே, தன்னந்தனியாகத் தானே துணையாகச் செல்லும் ஒரு துயரப்பட்ட ஆத்மாவின் துன்ப மயமான வேதனைப் புலம்பல் அல்ல, அந்தப் பாடல் தேவையால் நசுக்கப்பட்டு பயத்தால் ஒடுக்கப்பட்டு. உருவமோ, நிறமோ இல்லாத அப்பாவி உள்ளங்களின் முறையீட்டையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. இருளிலே இடமும் வழியும் தெரியாமல் தட்டுத் தடுமாறும் சக்திகளின் சோக மூச்சுக்களையோ, —நன்மையாகட்டும், தீமையாகட்டும்-எதன் மீதும் கண்மூடித்தனமான அசுர வெறியோடு மோதிச் சாட முனையும் வீறாப்புக் குரல்களையோ அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. எதையும் உருப்படியாய்க் கட்டிவளர்க்கத் திராணியற்ற, எல்லாவற்றையும் நாசமாக்கும் திறமை பெற்ற. அர்த்தமற்ற துன்பக் குரலையோ, பழிக்குப் பழி வாங்கும் வெறியுணர்ச்சியையோ அவர்கள் பாடவில்லை. சொல்லப்போனால், பழைய அடிமை உலகத்தின் எந்தவிதமான சாயையும் அந்தப் பாட்டில் இல்லவே இல்லை.

தாய்க்கு அந்தப் பாடலிலிருந்த கூரிய சொற்களும், கடுமையான ராக மூச்சும் பிடிக்கவில்லை. ஆனால், அந்த வார்த்தைகளையும் ராகத்தையும் அமுங்கடித்து, இதயத்தில் சிந்தனைக்கு வயப்படாத ஏதோ ஒரு உணர்ச்சியை மேலோங்கச் செய்யும் ஒரு இனந்தெரியாத மகா சக்தியை அவள் அந்த இளைஞர்களின் கண்களிலும் முகங்களிலும் கண்டாள்; அவர்களது இதயங்களில் அது வாழ்ந்து வருவதாக உணர்ந்தாள். எந்தவிதச் சொல்லுக்கும் ராக சுகத்துக்கும் கட்டுப்படாத இந்த ஏதோ ஒன்றுக்கு எப்பொழுதும் தனிக் கவனத்துடன் தான் கேட்ட அந்தப் பாடல், மற்றப் பாடல்களைவிட ஆழமான உணர்ச்சிப் பெருக்கை அவளுக்கு ஊட்டியது...

அவர்கள் அந்தப் பாடலை மற்றவற்றைவிட மெதுவான குரலில்தான் பாடினார்கள், என்றாலும், அவர்கள் பாடிய முறைதான் வலிமை மிக்கதாகத் தோன்றியது. மார்ச் மாதத்தின் நிர்மலமான நாளொன்றைப்போல், வசந்த காலத்தின் வரவை அறிவிக்கும் ஒரு தினத்தைப்போல், அந்தப் பாடல் எல்லாரையும் தன் வசப்படுத்தி இழுத்தது.

“இந்தப் பாடலைத் தெருக்களின் வழியே நாம் பாடிச் செல்வதற்குரிய காலம் வந்துவிட்டது!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உணர்ச்சியற்றுச் சொல்லுவான்.