பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

51


சமீபத்தில் செய்த ஒரு திருட்டுக் குற்றத்திற்காக, அவனது தந்தை தனீலோ சிறைத் தண்டனை பெற்றுச் சென்றபோது, நிகலாய் தன் தோழர்களைப் பார்த்துச் சொன்னான்,

“இனிமேல் நாம் எங்கள் வீட்டிலேயே கூடலாம்.”

ஒவ்வொரு நாள் மாலையிலும், பாவெல் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவனுடன் யாராவது ஒரு நண்பனும் கூட வந்து சேருவான். அவர்கள் உட்கார்ந்து படிப்பார்கள், குறிப்பு எடுப்பார்கள்; அவர்களுக்குள்ள அவசரத்தில் முகம், கை கழுவிக்கொள்ள மறந்துபோய் விடுவார்கள். சாப்பிடும்போதும், தேநீர் அருந்தும்போதும் அவர்களது கையிலே புத்தகங்கள் இருக்கும்; அவர்கள் எதைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிவது தாய்க்கு வரவரச் சிரமமாகிக்கொண்டிருந்தது.

“நாம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கத்தான் வேண்டும்” என்று பாவெல் அடிக்கடி சொல்வான்.

வாழ்க்கை வெகு வேகமாக, ஜுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்து மறு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்கள். மலர் மலராய்ச்சென்று வண்டு தேனுண்ணுவதைப்போல், அவர்கள் விரைந்து விரைந்து புத்தகம் புத்தகமாகப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

“அவர்கள் நம்மைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள்; நம்மீது சீக்கிரமே வலை வீசப் போகிறார்கள்!” என்று சொன்னான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் . “வலையில் விழுவதுதானே குருவிக்குத் தலைவிதி” என்றான் ஹஹோல்.

தாய்க்கு அந்த ஹஹோலின் மீது நாளுக்கு நாள் வாஞ்சை அதிகரித்தது. அவன் ‘அம்மா’ என்று அருமையாக அழைக்கும்போது, ஒரு பச்சிளங்குழந்தை தன் மென்மையான பிஞ்சுக்கரத்தால், அவளது கன்னத்தை வருடிக்கொடுப்பது போன்ற சுகம் தாய்க்குத் தட்டுப்பட்டது. பாவெலுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வேறு வேலைகளிருந்தால், ஹஹோல் அவளுக்கு விறகு தறித்துக் கொடுப்பான். ஒரு நாள் அவன் ஒரு பலகையைச் சுமந்துகொண்டு வந்து போட்டு, கோடரியால் அதைச் செதுக்கினான்; உளுத்து உபயோகமற்றுப் போன வாசற்படியை அகற்றிவிட்டு, அந்தப் பலகையால் வெகு சீக்கிரத்தில் லாவகமாய் ஒரு வாசற்படி செய்து போட்டுவிட்டான். ஒரு தடவை வீட்டின் வேலியை வெகு திறமையோடு பழுது பார்த்துச் சீராக்கினான். அவன் வேலை