பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“தாய்”
கதைச் சுருக்கம்

பனிக்காலம் கழிந்து இளவேனிற் காலம் மணம் பரப்பத் தொடங்கிய தருணத்தில், இரவு பகல் சமமாகும் நாள் நெருங்கும் முன் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைந்து சூறாவளிகளை வென்று புறங்கண்டு புத்துலகம் பூத்தது. இரக்கமில்லாக் கொடுமை பல்கிப் பெருகிய காலம் இக்காலம், இக்காலத்தின் குறியீடாக, அடையாளமாக, தற்செயலாகப் பிறந்துள்ளீர். பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவைப் பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழித் திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்கவேண்டி இருக்கும்.

கார்க்கிக்கு ரோமெய்ன் ரோலண்டு வரைந்த கடிதம்

பெல்கேயா நீலவ்னா.....

படிக்காதவள்; உலகம் அறியாதவள். தொழிலாளியின் மனைவி. குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய அடி உதைபட்டு அலைக்கழிக்கப்பட்டவள். இவளே, பிற்காலத்தில் புரட்சிப் புயலான ‘தாய்’ ஆகிறாள். மக்சீம் கார்க்கியின் ஒப்புயர்வற்ற அரிய படைப்பு.

கணவனை இழந்த தாய் குடித்துவிட்டு வீடு திரும்பிய தன் மகன். “பாவெல் விலாசவ்"வை ஏக்கத்துடன் பார்த்து அரவணைத்துக் கொள்கிறாள். மகன் மாறுகிறான்.

தோழர்கள் பலர் வீடு வருவதையும் எப்பொழுதும் மகன்

படித்துக்கொண்டே இருப்பதையும் பார்த்த தாய் தன் மகன் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படித்துவருவதும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதும் அறிந்து மகன் புது வழியில் செல்வது அறிந்து மகிழ்கிறாள். அடிக்கடி அவள் வீட்டில் கூட்டங்கள் நடைபெறுகின்றன.