பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

61


அடுப்பைப் பார்த்தாள்; அடுப்புக்குக் கீழே பார்த்தாள்: தண்ணீர் பீப்பாயைப் பார்த்தாள், பாவெல் அந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே வீட்டுக்கு ஓடி வருவான் என்று எதிர்பார்த்தாள்; ஆனால் ஏமாந்தாள். அவன் வரவில்லை, கடைசியில் அவள் நடந்து நடந்து அலுத்துப்போய் சமையலறையிலிருந்த பெஞ்சின்மீது புத்தகங்களை வைத்துவிட்டு அதன் மீது உட்கார்ந்தாள், அந்த இடத்தைவிட்டு அசைவதற்கே பயந்து போய் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பாவெலும் ஹஹோலும் வீடு திரும்பும்வரையிலும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

“உங்களுக்கு விஷயம் தெரியுமா?” என்று அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வாய்விட்டுக் கத்தினாள்.

“ஆமாம், தெரியும்” என்று புன்னகையோடு சொன்னான் பாவெல்; “நீ என்ன பயந்துவிட்டாயா?”

“ஆமாம், எனக்கு ஒரே பயம்; ஒரே பயமாயிருக்கிறது....”.

“நீ பயப்படக்கூடாது. அதனால் பயனில்லை” என்று சொன்னான் ஹஹோல்.

“சரி, தேநீருக்குத் தண்ணீர்கூட வைக்கவில்லையா?” என்று கேட்டான் பாவெல்.

“எல்லாம் இதனால்தான்” என்று கூறிக்கொண்டே தன்னிடத்தை விட்டு எழுந்து, புத்தகங்களைச் சுட்டிக்காட்டினாள் அவள்.

அவளது மகனும், ஹஹோலும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அந்தச் சிரிப்பினால் அவள் மனம் சிறிது நிம்மதிபெற்றது. பாவெல் அந்தப் புத்தகங்களில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து, புழக்கடைக்குச் சென்று ஒளித்து வைக்கப் போனான்.

“இதற்கெல்லாம் பயந்தால் ஒன்றுமே நடக்காது அம்மா” என்று கூறிக்கொண்டே தேநீர் அடுப்பை ஏற்றினான் ஹஹோல், “இந்த மாதிரி முட்டாள்தனத்தில் ஜனங்கள் தங்கள் நேரத்தைப் பாழடிப்பது இருக்கிறதே அது, படுமோசமான, வெட்ககரமான காரியம். இடைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும், பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக்கொண்டும் பெரிய பெரிய குண்டு மனிதர்கள் இங்கு வருவார்கள்; இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள். படுக்கைக்கு கீழே அடுப்புக்குக் கீழே எல்லாம் பார்ப்பார்கள். மேலே ஒரு அட்டாலி இருந்தால் அதில் ஏறிப் பார்ப்பார்கள். நிலவறையிருந்தால் அதிலும் நுழைந்து பார்ப்பார்கள். அவர்களது மூஞ்சியிலும் தலையிலும் நூலாம்படை அப்பி அடைவதுதான் மிச்சமாயிருக்கும்; ஏமாற்றத்தால் எரிந்து விழுவார்கள்,