பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

65


அப்படிப் பேசியவன் ஓர் உயரமான, ஒல்லியான, நறுக்கு மீசை அதிகாரி. பெத்யாகின் என்ற உள்ளூர்ப் போலீஸ்காரன் தாயின் படுக்கையை நோக்கி விரைந்தான்.

“எஜமான் இவள்தான் அவனது தாய்!” என்று ஒரு கையால் தனது தொப்பியைத் தொட்டுக்கொண்டும் மறு கையால் பெலகேயாவைச் சுட்டிக் காட்டிக்கொண்டும் சொன்னான்: “அதோ, அவன்தான் அந்த ஆசாமி!” என்று கூறி பாவெலைச் சுட்டிக் காட்டினான்.

“பாவெல் விலாசவா?” என்று கண்களை ஏறச் சொருகிக்கொண்டே கேட்டான் அதிகாரி.

பாவெல் தலையை ஆட்டினான்.

“நான் உன் வீட்டைச் சோதனை போட வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே, மீசையைத் திருகிவிட்டுக்கொண்டான் அதிகாரி.

“ஏ, கிழவி, எழுந்திரு! உள்ளே யார் இருக்கிறது?” அறைக் கதவினூடே ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் அவன்.

“உங்கள் பேர் எல்லாம் சொல்லுங்கள்!” என்ற குரல் அந்த அறையிலிருந்து கேட்டது.

வெளியே செல்லும் வாசற்புறத்தில் இரண்டு பேர் சாட்சிகளாக வந்து நின்றார்கள். ஒருவன் பழைய பாத்திரத் தொழிலாளியான திவெர்யகோவ்: ஒருவன் கொல்லுப்பட்டரைத் தொழிலாளியான ரீபின். ரீபின் கறுத்த தடித்த ஆசாமி; திவெர்யகோவின் வீட்டில் ஓர் அறையில் அவன் குடியிருந்தான்.

“வணக்கம், நீலவ்னா !” என்று கரகரத்த அடித்த குரலில் தாயைப் பார்த்துச் சொன்னான் அவன்.

அவள் தன் ஆடையணிகளை மாட்டிக்கொண்டு, தன்னைத் தைரியப்படுத்திக் கொள்வதற்காக ஏதேதோ முனக ஆரம்பித்தாள்.

“இந்த மாதிரி நான் கேள்விப்பட்டது கூட இல்லை! இப்படி நடுராத்திரியிலே வந்து பிராணனை எடுக்கிறது! தூங்கிக்கொண்டிருக்கிற வேளையிலா, உள்ளே வருகிறது!”

அந்த அறையோ குறுகலான இடம் கொண்டது. அந்த அறையில் ஏனோ பூட்ஸ் பாலிஷின் நாற்றம் கப்பென்று அடித்தது. உள்ளூர்ப் போலீஸ்காரனும், வேறு இரு போலீஸ்காரர்களும் தடதடவென்று தரையை மிதித்துக்கொண்டு அரங்கிலுள்ள புத்தகங்களையெல்லாம் இழுத்தெடுத்து, அதிகாரியின் முன்னால் கிடந்த மேஜைமீது