பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மக்சீம் கார்க்கி


குவித்தார்கள். வேறு இருவர் சுவர்களை முஷ்டியால் குத்திப் பார்த்தார்கள்; நாற்காலிகளுக்கு அடியில் புரட்டிப் பார்த்தார்கள்; அவர்களில் ஒருவன் அடுப்புக்கு மேலேகூட ஏறிப்பார்த்தான். ஹஹோலும் நிகலாயும் ஒரு மூலையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். அம்மைத் தழும்பு விழுந்த நிகலாயின் முகம் திட்டுத் திட்டாய்ச் சிவந்தது. அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் அதிகாரியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஹஹோல் தன் மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு நின்றான். தாய் அந்த அறைக்குள் வந்தபோது, அவன் சிறிது சிரித்தான்; அவளை உற்சாகப்படுத்தத் தலையை ஆட்டினான்.

பய பீதியிலிருந்து தப்பிப்பதற்காக, அவள் வழக்கம்போல் பக்கவாட்டில் அசைந்து நடக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்தி நேராக நடந்தாள், இந்தப் புதிய நடை அவளுக்கு ஒரு வேடிக்கையான கம்பீர பாவத்தை உண்டாக்கியது. அவள் தைரியமாகத் தடதடவென்று நடந்தாள்; எனினும் அவளது புருவங்கள் மட்டும் பயத்தால் நடுங்கத்தான் செய்தன.

அந்த அதிகாரி அந்தப் புத்தகங்களை மெலிந்த விரல்களுள்ள தனது வெள்ளை நிறக் கைகளால் பற்றி எடுத்தான்: விடுவிடென்று பக்கங்களைப் புரட்டினான்; மிகவும் அநாயாசமான லாவகத்தோடு அந்தப் புத்தகங்களை ஒரு புறம் எறிந்தான். சில புத்தகங்கள் சப்தமே செய்யாமல் பொத்தென்று விழுந்தன. யாருமே எதுவும் பேசவில்லை, அங்கு நிலவிய சப்தமெல்லாம் முசு முசுவென்று மூச்சு வாங்கும் வேர்த்துப்போன போலீஸ்காரர்களின் சுவாசமும் அவர்களது பூட்ஸ் சப்தமும், இடையிடையே ஒலிக்கும், அந்த ஒரே கேள்வியும்தான்.

“இங்கே பார்த்து முடித்துவிட்டாயா?”

பாவெலுக்கு அடுத்தாற்போல் சுவரையொட்டிச் சாய்ந்து நின்றாள் தாய்; அவன் எப்படிக் கைகளைக் கட்டியிருந்தானோ, அதுபோலவே அவளும் கட்டியிருந்தாள்; அவளது பார்வை போலீஸ்காரர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது: கால்களில் பலம் குன்றுவதாகத் தோன்றியது: கண்களில் நீர்த்திரை மல்கியது.

“புத்தகங்களை என் தரையில் எறிய வேண்டும்?” என்று நிகலாயின் முரட்டுக் குரல் அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது.

தாய் திடுக்கிட்டாள். திவெர்யகோவ் தன்னை யாரோ பிடித்துத் தள்ளிய பாவனையில் தலையை முன்னுக்கு இழுத்தான்; ரீபின் பற்களைக் கடித்துக்கொண்டு நிகலாயை வெறித்துப் பார்த்தான்.