பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

69


போலீஸ் தலைவன் முற்றத்திலிருந்து வந்து சேர்ந்தான்.

“அங்கேயும் ஒன்றுமில்லை. எங்கும் பார்த்தாயிற்று”

“பார்த்துப் புண்ணியம்? கிடைக்காதது அதியமில்லை. இங்கே இருப்பவன் ரொம்பக் கைதேர்ந்த புள்ளி. பிறகு இயல்புதானே!” என்று சலித்துப்போய்ச் சொன்னான் அதிகாரி.

தாய் அவனது வலுவற்ற சில்லுக் குரலைக் கேட்டாள், மஞ்சள் நிறமான முகத்தைப் பயத்தோடு பார்த்தாள். பொது மக்களைச் சற்றும் மதியாத கர்வியான, ஓர் இரக்கமற்ற எதிரி தன்முன் நிற்பதுபோல் அவள் மனத்தில் பட்டது. இந்த மாதிரி நபர்களோடு அவளுக்கு என்றும் பரிச்சயம் ஏற்பட்டதில்லை. இப்படிச் சிலர் இருக்கிறார்கள் என்பதே அநேகமாய் மறந்துவிட்டது.

“இந்த மனிதன்தான் அந்தத் துண்டுப் பிரசுரங்களைக் கண்டு கோபப்பட்டவன் போலிருக்கிறது” என்று அவள் நினைத்துக்கொண்டாள்.

“அந்திரேய் அனிசுமோவிச் நஹோத்கா, கள்ளத்தனமாய் பிறந்தவரே, உம்மை நான் கைது செய்கிறேன்!”

. “எதற்காக?” என்று அமைதியுடன் கேட்டான் ஹஹோல்.

“அது பின்னால் உமக்குத் தெரியும்” என்று நையாண்டியாய்ச் சொன்னான் அதிகாரி, “நீ படித்தவளா?” என்று பெலகேயாவைப் Lபார்த்துக் கேட்டான்.

“இல்லை, அவள் படிக்கவில்லை” என்றான் பாவெல்.

“நான் உன்னைக் கேட்கவில்லை” என்று கடுமையான குரலில் எதிர்த்துச் சொன்னான் அதிகாரி. “ஏ, கிழவி வாயைத் திற!”

தாயின் உள்ளத்தில் அந்த மனிதன் மீதுள்ள வெறுப்பு மேலோங்கியது. குளிர்ந்த தண்ணீரில் திடீரென்று விழுந்து விட்டதுபோல், அவளது உடம்பு முழுவதும் நடுநடுங்கி விறைத்தது. அவள் நிமிர்ந்து நின்றாள்; அவளது நெற்றிவடு கன்றிச் சிவந்தது: அவளது புருவங்கள் கண்ணுக்குள் இறங்குவதுபோல சுழித்தன.

“சத்தம் ஒன்றும் போட வேண்டாம்!” என்று கையை நீட்டிக்கொண்டு சொன்னாள் தாய். “நீங்கள் இன்னும் சிறு வயதினர். உங்களுக்குத் துன்பமும் துயரமும் இன்னதென்று தெரியாது!”

“அம்மா, சாந்தமாயிருங்கள்!” என்று கூறி பாவெல் அவளைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றான்.