பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

81


“நான் என் பாஷையிலே, ஒரு கொல்லனின் பாஷையிலேயே பேசுகிறேன். கடவுள் ஒரு நெருப்பு! அவர் இதயத்தில்தான் வாழ்கிறார். ‘பூர்வத்தில் சொல்தான் பிறந்தது; அந்தச் சொல்தான் கடவுளாயிருந்தது’ என்கிறார்கள். எனவே சொல்தான் பரிசுத்த ஆவி!” என்றான் ரீபின்.

“இல்லை, சொல்தான் அறிவு” என்று அழுத்திக் கூறினான் பாவெல்.

“ரொம்ப சரி. அப்படியென்றால், கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார்; அறிவிலும் குடியிருக்கிறார்— ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!”

தாய் தூங்கிப் போய்விட்டாள்: ரீபின் போனது அவளுக்குத் தெரியாது.

ஆனால் அது முதற்கொண்டு ரீபின் அங்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன் வரும் சமயத்தில் பாவெலின் பிற தோழர்கள் யாரேனும் இருந்தால், அவன் தன் பாட்டுக்கு ஒரு மூலையிலே உட்கார்ந்து ஒன்றுமே பேசாமலிருப்பான். எப்போதாவது இடையிலே “அதுதான் சங்கதி!” என்று ஒரு வார்த்தையை மட்டும் போட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடுவான்.

ஒரு நாள் அவன் அங்குக் கூடியிருந்த கூட்டத்தைத் தனது இருண்ட பார்வையால் நோட்டம் பார்த்துவிட்டுச் சோர்ந்த குரலில் பேசினான்:

“நிலைமை இன்று இப்படி இருக்கிறது என்பதைப்பற்றித்தான் நாம் பேசவேண்டுமே ஒழிய, அது நாளை எப்படி இருக்கும் என்பதைப்பற்றி அல்ல, நிலைமை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால், அவர்களே தங்களுக்கு எது நல்லது என்பதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அவர்களைக் கேட்காமலேயே அவர்கள் தலைமீது வேண்டாத விரும்பாத விஷயங்களையெல்லாம் புகுத்தியாயிற்று. அவை போதும்! இனி அவர்களாகவே சிந்தித்துப் பார்க்க அவகாசம் கொடுப்போம். வேண்டுமென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை, கல்வியை, கற்ற அறிவை, உதறித் தள்ளிவிட்டுப் போகட்டும்; தேவாலயத்திலுள்ள கடவுளைப்போல, எல்லாமே தமக்கு எதிராகத்தான் அணிவகுத்து நிற்கின்றன என்பதை அவர்களே உணரட்டும். புத்தகங்களை அவர்கள் கையிலே கொடுங்கள். அவர்களே விடை கண்டுகொள்ளட்டும். ஆமாம்!”