பக்கம்:தாய் மண்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

மறுமுறையும் தமிழரசி அந்தக் கண்ணாடியை ஜாடையாகப் பார்க்கத் தவறவில்லை. எம்பித் தணிந்த மார்பகத்தில் பதிந்து தவழ்ந்து கிடந்த கழுத்துச் சங்கிலியின் பதக்கம் இம்முறை அவளுக்குப் பளிச்சென்று பட்டது. அந்தத் தங்கப் பதக்கத்தைக் கண்டதும், அவளுடைய செவிகளில், தன் தோழி சுடர்க்கொடி அன்றாெரு நாள் நயத்தக்க நாகரிகத்தோடு பேசிய பேச்சு ஒலிக்கத் தொடங்கியது. "தமிழரசி! உங்களோட இந்த டாலருக்குப் பதிலாக கூடிய சீக்கிரத்திலேயே தங்கத்தாலி டால் வீச வேணும். இது என் ஆசை. இது உங்க ஆசையாகவும் இருந்திடுச்சுதின்னா, எல்லாம் சுபமாகவே கைகூடிவிடும். என்ன ஸிஸ்டர் நான் சொல்றது?" என்று தன் இதயத்தை வெளிக்காட்டிச் சொன்னதுடன் நிற்காமல், அவள் அபிப்பிராயத்துக்கு ஆதாரம் சேகரம் செய்து, அவ்வெண்ணத்தை நிலைப்படுத்திக் கொள்ள விழைந்து, உடனடியாக ஒரு கேள்வியையும் அவள் முன்னே வைத்தாள்.

இப்படிப்பட்ட திருமணத் தொடர்பு கொண்ட வினாக்களை மனித மனங்கள் பரிவர்த்தனை செய்து கொள்வது சரி; ஆனால் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு உரிய விடைகளைத் தெய்வங்கள் அல்லவா சொல்லவேண்டும்?

தமிழரசி மெளனமாக நகை பூத்தாள். “நீ சொல்றது உண்மை, சுடர்க்கொடி! ஆனால், என்னைப் பொறுத்த வரை இந்தத் திருமண விஷயம் அவ்வளவு அவசரமான ஒரு காரியமாய் எனக்குத் தோணலேயே! அதுக்குக் காரணம், எனக்கென்று நான் வகுத்துக் கொண்டிருக்கக்கூடிய கொள்கைகளாகவும் இருக்கலாம்! ஆனல், என் நிலை வேறே; உன் நிலை வேறே! என் பேச்சை வச்சுக்கிட்டு உன்னை நீ எடை போட்டுக்கக் கூடாது!...” என்று சொல்லி வாய் மூடினாள், அவள்.

அதற்குள் இடைமறித்தாள் தோழி. "உங்க பேச்சை வச்சுக்கிட்டு எப்படி நான் எடைபோட முடியும்?... என் வெயிட்டுக்கு நான்தானே சுமையாக முடியும்" என்று சொல்லி, தன்னுடைய டம்பப் பையைத் திறந்து அவளது எடைச் சீட்டைக் காட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/13&oldid=1411069" இலிருந்து மீள்விக்கப்பட்டது