பக்கம்:தாழம்பூ.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 97

கான்ஸ்டபிள், பயப்பட்டவர்போல் நடந்தபடியே அவரை ஒரு சல்யூட்டால் அடித்துவிட்டு, சரோசாவை கண்களால் இழுத்துக் கொண்டு போய் விட்டார். சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் கேட்டார் :

“என்ன சார் திடீர்னு சூடாயிட்டீங்க?”

“பின்ன என்னப்பா, டெப்டி கமிஷனர் காலுல நான் விழுந்தேன்னு சொல்றான். அறிவு கெட்ட மடயன். அந்தப் பொண்ண போலீஸ் ஸ்டேஷன்ல வச்சே கொஞ்சிடப் போறான். நீயே போய் அவளை ஸ்டேஷனுக்கு வெளியில விட்டுட்டு வா.”

இன்ஸ்பெக்டர் அதற்குமேல் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அங்குமிங்குமாய் உள்ள அறைகளைப் பார்த்துவிட்டு படியிறங்கினார்.

ஒரு புளிய மரத்திற்கு அடியில் சரோசாவை அவள் தோஸ்துகள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே கான்ஸ்டபிள் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் கை தட்டி, அவர்களது கண்களை தன் பக்கம் இழுத்து, அவர்களை வெளியே போகும்படி சைகை செய்தார்.

சரோசா, தனது தோஸ்துகளோடு, நொண்டிக் கொண்டே வெளியே வந்தாள். ஒருவன் முகவெட்டு. அதோடு குளோஸ்கட்டு. இன்னொருத்தன் அம்மைத் தழும்பன், மற்றவர்கள் மற்றும் பலர் என்பது மாதிரி சாதாரணங்கள். முகவெட்டுக்காரன், எதிரே இளநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை அடையாளம் காட்டிப் பேசினான் :

“அதோ பாருமே, ஒன்னை கம்பியெண்ண வச்ச, ஒத தின்னவச்ச அந்த இளங்கோப் பயல் இரண்டு குட்டிகளோட எப்படி ஜாலியா நிக்கறான் பாரு. இப்பவே அவன ஒரு சீவு சீவிட்டு வரப்போறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/111&oldid=636551" இலிருந்து மீள்விக்கப்பட்டது