பக்கம்:தாழம்பூ.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 127

சட்டைப்பையை இழுத்து, அதற்குள் இருந்த ரூபாய் நோட்டுகளைச் சுருட்டி காதில் வைத்துக்கொண்டு, கால்களை எடுத்தான். இன்னொருத்தன் உருட்டைக்கம்பால் அவன் தலைக்குக் குறிபார்த்தபோது, ஒருத்தன் உஷார்படுத்தினான்.

“வாணாண்டா! அண்ணன், நோவடிக் கொடுங்கோ, சாவடி வேண்டாம்னு சொன்னது தெரியாதா? அவர் அப்படிச் சொன்னா அதுல ஏதாவது அர்த்தமிருக்கும்.”

அனைவரும் இளங்கோவை அந்தப் புதர்ச் செடியிலேயே போட்டுவிட்டு, வீரியமாய் நடந்தார்கள். வேர்வையை துடைத்தபடி, நின்று, நிதானமாகப் போனார்கள். ஒருவன் இளங்கோவை நோக்கி மீண்டும் ஓடிவரப் போனான். சகாக்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். இப்போது அவர்களுக்கு நேரமில்லை. சேட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்ட இப்பவே கொஞ்சம் சாராயத்தைக் குடிக்க வேண்டும்.

இளங்கோ, மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்தது போல் முட்படுக்கையில் கிடந்தான். வாயில் ஒருபக்கம் வெள்ளை வெள்ளையான நுரை. மறுபக்கம் சிவப்புச்சிவப்பான ரத்தம். நடுவில் வெள்ளையும், சிவப்பும் கூட்டணி கொண்ட கலவை நெற்றிப் பொட்டில் பெரிய பள்ளம். அந்தப் பள்ளத்தில் ரத்த ஊற்று. ஒரு கை அசைவற்றுக் கிடந்தது. இன்னொரு கை அங்குமிங்குமாய் ஆடியது. கால் பாதங்கள் ரத்தச் சேற்றில் நனைந்து கொண்டிருந்தன. துணியை அடித்துத் துவைத்துப் பிழியாமல் காயப்போட்டது போன்ற தோற்றம். அவனுக்கு ஏற்பட்ட அக்கிரமம் தாங்க முடியாததுபோல் ஒரு ஆமணக்குச் செடி கடற்கரைக் காற்றில் ஆடி அவன் முகத்தை வருடிவிட்டது. அருகேயுள்ள எருக்கலைச் செடிகள் வெள்ளை பல்பு மாதிரி பூக்களைக் காட்டியபடி ஒப்பாளியிட்டன. அவனோ பேச்சற்று, மூச்சற்றுக் கிடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/141&oldid=636584" இலிருந்து மீள்விக்கப்பட்டது