பக்கம்:தாழம்பூ.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 129

பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவர்கள் லாகவமாக ஒதுங்கிக்கொண்டார்கள். சில கார்க்காரர்கள் திட்டிக்கொண்டே போனார்கள். “குடிகாரப் புருஷனுக்கா வக்காலத்து வாங்குறே?” என்று வேறு வக்கனை பேசிக்கொண்டு நிற்காமலே ஒடினார்கள்.

பூக்கார ருக்குமணிக்கு, கண்டும் காணாமல் போன அந்த யந்திர மனிதர்களின் கோழைத்தனம் தனது துணிச்சலுக்கு உரமாகி மனதுள்ளே பூத்திருக்கும் மனித நேயத்திற்கு உருவமாகியது. சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, அவன் தலையை நிமிர்த்தினாள். பிடரியில் துளைத்த முட்களை செடியோடும், கொடியோடும் ஒடித்துப் போட்டாள். ஆனாலும், பல முட்கள் அவன் உடம்பின் பல இடங்களில் கொள்ளுமாதிரி கறுப்புக்கறுப்பாய் கண் சிமிட்டின. ஒரு சப்பாத்திக்கள்ளி முள், செருப்புப் போடாத தனது கால்களைத் துளைப்பதையும் பொருட்படுத்தாது ருக்குமணி அவனை துாக்கப் போனாள். சப்பாத்தி முள்ளால் கால் துடித்தது. அதை எடுப்பதற்குக் குனித்தாள். அப்படிக் குனிந்தால் அவனை அப்படியே மீண்டும் புதர்ச் செடியில் மல்லாக்க வீழ்த்த வேண்டும். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள். சப்பாத்திமுள்ளின் கோரப் பற்களில் காலை குடியேற்றிக் கொண்டே, இளங்கோவை தன் பக்கமாய் இழுத்து, அருகில் உள்ள மணற்பரப்பில் போட்டாள். தொலைவில் ஒரு கூட்டம் தென்பட்டது. தலையில் கூடைகளோடு வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்திற்காக, அவள் காத்திருந்தாள்.

ருக்குமணி, டப்டப் என்ற சத்தம் கேட்டுத் திரும்பினாள்.

பாவாடைதெரிய,சேலையையே தாவணி மாதிரிகட்டியிருந்த ஒருத்தி, அங்கே வந்து நின்றாள். முழங்கை வரைக்கும் நீண்ட சட்டைக்காரி, மோவாயை அட்டகாசமாய் அங்குமிங்குமாய் ஆட்டியபடியே ருக்குமணிக்குப் புத்திமதி சொன்னாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/143&oldid=636586" இலிருந்து மீள்விக்கப்பட்டது