பக்கம்:தாழம்பூ.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 135

“தாய் எட்டடி பாஞ்சால் குட்டி பதினாறு அடி பாயுற கத. தலைவர்களுக்குப் பாதுகாப்புத் தேவதான். இல்லங்கல. ஆனாலும் சினிமாக்காரன், ஒருத்தன வீரமா காட்டுறதுக்கு ஒன்பது பேரை பேடியாக்குறது மாதிரி, அவங்களோட பாதுகாப்புக்கு தல காஞ்சவங்கதான் கிடைச்சாங்களா? டெய்லி இப்பிடி காக்க வெச்சா, நம்ம பொழப்பு என்னாவறது? இப்பவே மணி ஒன்னு, காய்கறி வாடிப்பேச்சி, பழம் வேற அழுகிடும். அடக்கடவுளே!”

‘பேசாம ஒவ்வொரு தலைவருங்க வீட்டுமுன்னாலயும் அழுகிப்போன பழங்களக் கொட்டனும். தலைவருக்காக மக்களா, மக்களுக்காக தலைவரான்னு நேருக்கநேரா கேள்வி கேக்கணும். ஆனா, யோவீக எங்க விடுவான்? இப்படிப்பொலம்பறதோட சரி.”

“ஆயா, பஸ்கல வருவே, இப்ப ஏன் வேனுல வரே?”

“லக்கேஜ மூணு ரூபா. டிக்கெட்டு இரண்டு ரூவா. நான் என்ன கூடையில சாராயக்கேன வச்சி, அந்த வாசனைய மறைக்கிறதுக்கு கருவேப்பலையப் போட்டு மூடியா கொண்டு வாரேன், கேக்கிறத கொடுக்கறதுக்கு? பாவம் இந்த வேன் புள்ளாண்டான் பரிதாபப்பட்டு எல்லாத்துக்கும் மூணுருவா போதும்னு சொல்லிட்டான்’

வேனில் இருந்த அந்த ஏழைபாழைகள் இப்படி பல்வேறுவிதமாகப் பேசிக்கொண்டே போனார்கள். அவ்வப்போது லேசாய் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த இளங்கோவையும் பார்த்துக் கொண்டார்கள். ருக்குமணி அவ்வப்போது இளங்கோ உடம்பில் பீறிட்ட ரத்தங்களை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தாள். கருவேப்பிலையில் சில ரத்தத் துளிகள் பட்டன. ஆயா, அந்த இலைக்காம்பை ஒடித்து வெளியே போட்டாள்.

அந்த வேன், ஒரு மருத்துவமனை முன் நின்றது. அந்த மருத்துவமனைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாத வண்ணம் கறுப்புக் கண்ணாடிகள் கவர்களாக இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/149&oldid=636592" இலிருந்து மீள்விக்கப்பட்டது