பக்கம்:தாழம்பூ.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தாழம்பூ

கிடந்தான். இன்னொருத்தன் அவன்மேல் படுத்துக் கிடந்தான். ஒருத்தன், நண்டு இருந்த தட்டை நக்கினான்; இன்னொருத்தன் காலி கிளாசையே வாய்க்குக் கொண்டு போனான். சரோசாவுக்கு இளங்கோ சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. நண்டுத் தட்டை நக்குகிறவன் முகத்தைப் பன்றி முகமாகக் கற்பனை செய்து பார்த்தாள். வெறும் கிளாசை வாய்க்குக் கொண்டு போகிறவனை மனித முகத்தோடு கூடிய நான்குகால் நாயாக உருவகித்துப் பார்த்தாள். சிரிப்பும் வந்தது; சினமும் வந்தது; கூடவே சிறுமையும் ஏற்பட்டது.

சரோசா, செருப்புச் சத்தம் கேட்டு, வாசலைப் பார்த்தாள். ஒரு கையில் தேங்காயையும், மறு கையில் தூக்குப்பையையும் பிடித்தபடி, ஒருத்தன் உள்ளே வந்தான். பைக்குள் இரண்டு கிலோ அரிசி. சரோசா, அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியபடியே திட்டினாள் :

“இந்தாப்பா கோவிந்து! இனிமேக்காட்டி இந்தப் பக்கம் இப்டி வந்தே, நானே ஒன்னை ஒதைப்பேன். சரக்கு வேணும்னா, இதோ ஒன் பேண்ட மார்வாடிகிட்ட அடகு வை. வீட்ல அரிசி, தேங்காயை ஏய்யா திருடுற? போப்போ!’

இதற்குள், துரை அண்ணன் சத்தம் கேட்டு, அவள் வீட்டுக்குள் போனாள். ஊஞ்சல் பலகையில் துரை, அவனை உரசியபடி, அவன் தர்ம பத்தினி. அவள், இவளை அதட்டினாள்:

“ஆமா, அவனை எதுக்கு இப்படி அதட்றே? குடிக்க வர்றவன் எதோடு வந்தா ஒனிக்கு என்ன?”

“எக்கோ ஒனக்கும் எனக்கும் பேச்சு இல்லை. என்ன விஷயம் துரை அண்ணே.”

“கும்மாளம்மனுக்கு விசேஷமாம். கூட்டம் அதிகமா வரும். சரக்கு எடுத்துட்டு வந்திடு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/184&oldid=636631" இலிருந்து மீள்விக்கப்பட்டது