பக்கம்:தாழம்பூ.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 175

அண்ணாத்தே. அவன் வாடையே வானாம். பேசாம இளங்கோ சாரு சொல்ற வேலைல சேர்ந்திடு. இன்னாமே! நானு பேசிக்கினே போறேன், நீ சொம்மாவே நின்னா இன்னா அர்த்தம்?”

சரோசா, இன்னும் அசைந்து கொடுக்காமல் இருப்பதைப் பார்த்த ருக்குமணிக்கு லேசாகப் பயம் பிடித்தது. இதற்குள் ஆறுமுகப்பயல் அம்மாமேல் குறிவைத்த ஒரு அழுகிய தக்காளி, சரோசாவின் நடுமூக்கில் பட்டு இரண்டு கண்களிலும் சிதறியதால் அவள் கயவுணர்வுக்கு வந்தாள். ஆனாலும், தலையில் கைவைத்தபடியே, அந்த வீட்டின் இற்றுப்போன கதவில் அற்றுப்போனவள் போல சாய்ந்தாள். ருக்குமணி, அவளை ஆதரவாய் பிடித்து. நார்க்கட்டிலில் உட்கார வைத்தாள். பிறகு அவள் சோகம் தனக்கும் தொத்த, கேட்பாரற்ற குரலில் பேசினாள் :

“அல்லாம் நல்லதுக்குதாம்மே. நடந்தத கெட்டகனவா நினைச்சடு. இளங்கோ சார் நாளிக்கே வேலையில சேருறதா மல்லி சொல்லிச்சு. நீயும் சேர்ந்திடு. இல்லாட்டி ஆறின சோறு பழஞ்சோறுதான்.ஏண்டா, பொறம்போக்கு எல்லா தக்காளியையும், அக்குவேறு ஆணிவேறா பண்ணிட்டியே. நானு கொயம்புக்கு இன்னடா பண்ணுவேன்? ஏம்மே சரோசா, ஏதாவது பேசி என் வயித்திலே பாலு வாருமே.”

ருக்குமணி, மகன் குதறிப்போட்ட தக்காளி சதைகளை பொறுக்கிக் கொண்டே, சரோசாவைப் பார்த்தாள். அவள் பிரச்சினை மட்டும் குறுக்கே வரவில்லையானால், இந்நேரம், அருமை மகனை தக்காளி மாதிரியே பிதுக்கியிருப்பாள். அதைப் புரிந்து கொண்டது போல் அந்தப் பயலும் அம்மாவுக்குப் பயந்து சரோசாவின் மடியில்போய் உட்கார்ந்து கொண்டான். ஏதோ ஒரு பொருள் தன் மடியில் உட்கார்ந்திருக்கிறது என்ற உணர்வு மட்டுமே உந்த, சரோசா ருக்குமணியைப் பார்த்தாள். பிறகு விரக்தியோடு பதிலளித்தாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/189&oldid=636636" இலிருந்து மீள்விக்கப்பட்டது