பக்கம்:தாழம்பூ.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 2||

தலையிலும், தோளிலும் தூக்கிப் போட்டுக் கொண்டு விடாப்பிடியாய் வந்தவர் இந்த நாயினா. அவரை அப்படியே விட்டுவிட்டு ஓடுவது, அம்மாக்காரி அடுத்தவனை இஸ்துக்குன்னு போனதுக்கு சமானம். சரோசா நாயினாவை நோக்கி ஓடினாள். “நாயினா. நில்லு நாயினா, நில்லு ரெண்டு பேரும் ஒண்ணாவே வெட்டுப்படலாம்” என்று கூக்குரல் இட்டபடியே அவரை நோக்கி ஓடினாள். அவள் போட்ட கூச்சலில் புதருக்குள் கிடந்த ஒரு பெருச்சாளி ரோட்டுக்கு வந்தது. துரத்தி வரும் கும்பல் சிறிது நின்று பார்த்தது. சொரி நாய்களே மீண்டும் குலைத்தன.

சரோசா, தப்பிக்கும் திசையிலிருந்து தாக்குதல் திசையை நோக்கி ஒடிஓடி, நாயினாவை நெருங்கி, அவரை அப்படியே கட்டிப்பிடிக்க, அந்த வேகத்தில் இருவரும் கீழே விழுந்தார்கள். “நாயினா. நாயினா.” என்ற அலறல். “மவளே. மவளே” என்ற முனங்கல். பிறகு அலறலும், முனங்கலும் அற்றுப்போன நிசப்தம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்பதுபோல் அந்தப் பட்டமரத்தில் துளிர்த்த கொடி அதிலேயே படர்ந்தது. கொடி முளைத்த மரமும் அந்த கொடிக்குள்ளேயே முடங்கிக் கொண்டது. ‘என்ன செய்யனுமோ. செய்யுங்கடா’ -

அந்த இருவரையும் சுற்றி, பட்டாக்கத்தியோடு மூன்றுபேர் நிதானமாக ஒரு வெளிவட்டம் போட்டார்கள். ஓணானை கடித்துக் கடித்துவிளையாடநினைக்கும் நாய் போல, அவர்களை நிதானமாகக் கூர்ந்து பார்த்தார்கள். தென்கிழக்கில் ஒரு இரும்புத்தடியன், வடமேற்கில் ஒரு கம்புக்காரன். இரை கிடைத்த திருப்தியில், நிதானமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் நடந்தார்கள். ஆனாலும் -

திடீரென்று ஒரு விசில் சத்தம்; மூன்று தடவை மூச்சு விடும் அளவுக்கான ஒரு நெடுஞ்சத்தம். அந்த விசில் சத்தம் நின்றதும் ஒரு வாய்ச் சத்தம் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/225&oldid=636676" இலிருந்து மீள்விக்கப்பட்டது