பக்கம்:தாழம்பூ.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோசா, சர்க்கார் வேலையில் கேஷ்வலாகச் சேர்ந்து அப்படியும், இப்படியுமாய் ஒருமாதமாகி விட்டது. அன்று சம்பள நாள்.

அந்தச் சம்பள நாளே பலருக்குத் துக்க நாளாகத் தோன்றியது. ஈட்டிக்காரர்களக்கும், அந்த ஈட்டியைவிட பயங்கரமான பார்வையில் மிரட்டும் மனைவிகளுக்கும் சம்பளம் வரட்டும் என்று அதையே சர்வ கடன் நிவாரணியாகச் சொல்லி வந்த ஊழியர்களில் பெரும்பாலோர் இப்போது பேயறைந்து காணப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, போதாக் குறைக்கு வருமான வரி பிடித்தம் செய்யும் வருடக் கடைசி. மாதச் சம்பளத்தை குறைவாகக் காட்டி, வீட்டுப்படி, பயணப்படி, மருத்துவப்படி ஆகிய அனைத்தையும் படிப்படியாக வாங்கிக் கட்டும் கம்பெனிக்காரர்களும், பெரிய பெரிய முதலாளிகளும், வருமான வரி வலையை கிழித்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும்போது, இந்த அரசு ஊழியர்களின் வருமான வரி அவர்களது சம்பளப் பில்களிலேயே பிடிக்கப்பட்டு விடுகிறது. லட்சக்கணக்கான வருமான வரி ரூபாயை பாக்கி வைத்திருக்கும் சினிமா நடிகர், நடிகைகளை விட்டு வைத்திருக்கும் அரசு, அரசு ஊழியர்களுக்கு இடது கையால் சம்பளம் கொடுத்து, வலது கையால் பிடுங்கிக் கொள்கிறது. ஆகையால், கிட்டத்தட்ட எல்லோருமே வாழ்வே மாயம்’ என்ற பிரமையில் இருந்தார்கள். அன்று சம்பளம் வாங்கப்போகும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவ மதத்தில் கூறப்படும் ‘பாவத்தின் சம்பளத்தை நினைத்தபடியே படியேறினார்கள்.

ஆனால், சரோசாவோ சந்தோஷமாக இருந்தாள். காலையிலேயே ருக்குவின் குடிசையில் அவளைப் பார்த்து “ஒனிக்கி இன்னா வாங்கிட்டு வரணும்’ என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/255&oldid=636709" இலிருந்து மீள்விக்கப்பட்டது