பக்கம்:தாழம்பூ.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 13

“யோவ். பட்டப்பகலுல ஒரு வயகப் பொண்ணு கிட்டயா வாலாட்டறே? தோ பார். என்ன தொட்ட அப்புறம் தெரியும் மவனே.”

இருவரும் சடுகுடு ஆடுவது போல் ஒருவரையொருவர் ஆழம் பார்த்தார்கள். அவள், அவன் கைகளுக்கு அப்பால் நடக்கப்போனபோது, அவன் கரங்கள் அனுமார் வாலாய் நீளுவது போல் தோன்றியது. உடனே அவள் டேய்... டாய் என்று தெருவோர்க்குக் கேட்காமல் அவனுக்கு மட்டுமே கேட்கும் சின்னக்குரலில் பேட்டைத்தனமாக உறுமினாள். அவனோ முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் அம்மாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட கர்மயோகிபோல் சரோசா அசைந்த விகிதாச்சாரத்திற்கு எதிர் விகிதாச்சாரத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான். இதனால் சரோசாவும் ஒரு அசைக்க முடியாத முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.

சரோசா, அவன் நெடுங்கையை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டாள். அவன் பதிலுக்கு அவள் கைகளைப் பிடிக்கப் போனான். பிறகு கூச்சப்பட்டு, அவள் கைபிடித்த கோணியைப் பிடித்து இழுத்தான். அவளோ, அவனை மாறி மாறித் தள்ளினாள். அவளை அப்படித் தள்ள முடியாத கூச்சத்தில் இருந்த அவன், ஒத்தாசைக்கு ஆள் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் பார்த்த போது -

சரோசா, தானே எதிர்பார்க்காத வகையில் தைரியப்பட்டாள். பின்னால் கிடந்த கோணிப் பையை முன்னால் கொண்டு வந்தாள். இன்னும் திரும்பாமல் நின்ற அவன் விலாவில், கோணிப்பையால் விளாசினாள். அவன் துள்ளிக் குதித்துத் திரும்பியபோது, தேங்காய்களால் கனத்து இரும்பு முட்கள் எட்டிப்பார்த்த அந்தக் கோணிப் பையால் அவன் முட்டிக்குக் கீழே இரண்டு கால்களிலும் வாங்கு வாங்கென்று வாங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/27&oldid=636725" இலிருந்து மீள்விக்கப்பட்டது