பக்கம்:தாழம்பூ.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 259

“தொரண்ணே! அய்யய்யோ, தொரண்ணே! கட்சியிலே அந்த தட்டுவாணி தடிச்சியும், அண்ணாத்தேயும் சேர்ந்து உன்னைத் தீர்த்துக் கட்டிட்டாங்களே. நானு பாவிண்ணே. இந்த ஒரு மாசத்துல ஒரு வாட்டியாவது ஒரு நட நடந்து உன்னைப் பார்க்காமப் பூட்டேனே. நீ அருண்டு மருண்டு துடிச்சப்போ ஒனிக்கு ஆறுதல் சொல்லாம இருந்துட்டேனே.ஏய் அண்ணாத்தே, நீ உருப்படுவியா? ஒன்னையும் உன் வப்பாட்டியயும் இதே மாதிரி அடிச்சுக் கொல்ற காலம் வராதா? அய்யோ. அய்யய்யோ..!”

சரோசா, வாயில் அடித்துக் கொண்டாள். எல்லோரும் அவளைக்கொலைகாரியாகப் பார்த்தபோது இளங்கோவின் கண்கள் கலங்கிவிட்டன. சிலர் பிரமிப்போடு எழுந்தார்கள். போலீஸ்காரர் லத்திக் கம்பை தரையில் தட்டியபடியே அதட்டினார்:

“இன்னும் ரெண்டு கொலை செய்வேன்னா சொல்றே? நல்லாத்தான் நடிக்கே? இல்லாட்டி ஒரு ஆம்பளைய பதினாறு இடத்தில் வெட்டி கடலுல போடுவியா? எழுந்திருடி.”

போலீஸ்காரர், அவள் முடியைப் பிடித்துத் துாக்கப் போனபோது, இளங்கோ அந்தக் கையை லேசாகப் பிடித்தான். இதற்குள் அவர் கை அவள் முடியைப் பற்றியபடி மேலே வந்தது. ஏதோ பேசப் போன இளங்கோவை பேச முடியாதபடி சில அலுவலக வாசிகள் உலுக்கினார்கள் :

“என்ன மிஸ்டர் இளங்கோ இந்த மாதிரி ஒரு கிரிமினல் கேர்ள எங்க தலையில கட்டிட்ட பாரு உன்னை நல்லவன்னு நெனத்தா. என்னப்பா. இதெல்லாம். ஊமை ஊரை கெடுக்கும். பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்பது சரியா இருக்கே...”

போலீஸ்காரரும் இளங்கோவைச் சந்தேகமாகப் பார்த்தார். வார்த்தைகளில் மரியாதை போட்டு அதே சமயம் அவமரியாதைக் குரலில் கேட்டார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/273&oldid=636731" இலிருந்து மீள்விக்கப்பட்டது