பக்கம்:தாழம்பூ.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j4. தாழம்பூ

கோணிக்குள் கிடந்த இரும்புக் கம்பி அவனை செமத்தியாகக் குத்திவிட்டன. அதனால், அவன் அடிபட்ட காலை தூக்கிப் பிடித்து வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்து ஒற்றைக் காலில் நின்றான். அவளோ அவனை, இந்த அடி போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல் பார்த்துவிட்டு, தனது ஏரியா திசையை நோக்கி புலிப் பாய்ச்சலில் நடந்தாள்.

இளங்கோ, திணறிப்போனான். மலைப்பாம்பின் கண்ணின் உக்கிரத்தில் கட்டுப்பட்டு அசைவற்று நிற்கும் மானாய் நின்றான். அந்த ஆண் மானுக்கு, இந்த அனுபவம் புதிது. அம்மாக்காரி காய்கறிக்காளியிடமோ,கார்ப்பரேஷன் குப்பை அம்மாவுடனோபோர் தொடுக்கும் போது, தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, அந்த வீட்டிலும் அதன் கற்றுப்புற வளாகத்திலும் ஒரு நிசப்தம் நிலவுவது போல் ஒரு அனுமானத்தைக் கொடுத்துவிட்டு தன் பாட்டுக்கு நடப்பவன். ஆனால் இப்போதோ அப்படி நடக்க முடியாமல் முட்டிக்கால்களுக்குக் கீழே ஊற்றுக் கண்களாய் துளிர்த்த ரத்தத் துளிகளை தலைகுனிந்து பார்த்தபடியே நின்றான். பிறகு அவன் ஒருபொருட்டே அல்ல என்பதுபோல் அவனுக்குப்புறமுதுகு காட்டி வீரத்தனமாய் நடந்த சரோசாவின் பின்தலையை, பிடரியில் கைவைத்தபடியே பார்த்தான்.இப்படியும் நடக்குமா என்ற சந்தேகம். நடந்துவிட்டதே என்ற ஆதங்கம். ஒரு பெண்ணோடு போட்ட முதல் சண்டை. கலகலப்பு இல்லாத கைகலப்பு. ஏமாற்றம். எரிச்சல். இயலாமை.

இளங்கோ, எல்லாம் முடிந்து விட்டது என்பது போல் திரும்பி வீட்டுக்குப் போகத்தான் போனான். இதற்குள் அந்தத் தெருமுனையிலிருந்து நிதானமாக வந்த ஒரு ‘பத்துப் பாத்திரம்மா’ இன்னும் முடியவில்லை என்பது போல் ஒப்பாளி போடாத குறையாக நடந்து முடிந்த விவகாரத்திற்கு அதிரடி வர்ணனை கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/28&oldid=636742" இலிருந்து மீள்விக்கப்பட்டது