பக்கம்:தாழம்பூ.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 275

இவளயெல்லாம் வெளியில விட்டுருக்கப்பிடாதுன்னு நான் அப்பவே சொன்னது, சரியாப் போச்சுது பாருங்கோ சார்.”

சரோசா, எதுவும் பேசாமல், நின்று கொண்டே செத்துப் போனவள் போல் தோன்றினாள். இன்ஸ்பெக்டர், துண்டு சிகரெட்டை ஆஷ்டிரேயில் வைத்து அழுத்திவிட்டு, இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். கோபம் வந்தால் அவர் செய்கிற முதல் காரியம் இதுதான். செயின்-ஸ்மோக்கிங். என்ன நினைச்சிருக்கான் இந்த சப்-இன்ஸ்பெக்டர்? அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு, பிரமோஷன்ல போகட்டும். அதுக்காக பேச்சை மாத்துறதா? இவள விடும்படி சொன்னதே இவன்தானே?

இன்ஸ்பெக்டருக்கு, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மேல் கோபம் கூடியதால், சரோசா மீதிருந்த கோபம் குறைந்தது. ஆனாலும் அவள் போட்ட அந்த பெட்டிஷனை நினைத்துக் கொண்டார். ‘எவ்வளவு தைரியம் இருந்தா கமிஷனருக்கு கம்ப்ளைண்ட் எழுதுவாள்? அதுவும் ஏ.சி-யா பிரமோஷன் வரப்போற சமயத்துல. டெப்டி கமிஷனருக்கு ஒரு போன் போட்டு, அவர விடுவிடு'ன்னு விடலாமா? நீங்க அப்ப விடச் சொன்னிங்க. இப்போ அப்படிச் சொல்ல முடியுமான்னு சவால் விடலாமா?

“இந்தாப்பா, இவள அந்த ரூமுக்குள்ள கொண்டு போ; விசாரிக்கிறபடி விசாரிச்சா சரியாயிடுவாள்.”

சரோசாவை, அங்கிருந்து உடம்பையும், உள்ளத்தையும் விசாரிக்கிற ஒரு நீண்ட, நெடிய இருண்ட அறைக்குள் இட்டுப் போவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வந்தபோது, நான்கைந்து பெண்கள் வாசலில் சிறிது நேரம் நிதானித்து நின்றுவிட்டு, பிறகு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருத்தி கறுப்புக் கோட்டுப் போட்டிருந்தாள். சரோசாவிடம் குசலம் விசாரிப்பதற்காக இருக்கையை விட்டு எழப்போன இன்ஸ்பெக்டர், இப்போது அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/289&oldid=636756" இலிருந்து மீள்விக்கப்பட்டது