பக்கம்:தாழம்பூ.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 283

இருவரும் ஒருவரையொருவர் தற்செயலாக சந்தித்துக் கொண்டார்கள். பழக்க தோசத்தில் மெல்ல நெருங்கினார்கள். இறுதியில் பாமா பின்வாங்கினாள். அவன் சட்டையில் ஒரு பை கிழிந்து பனியனைக் காட்டிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு நடந்தாள். ஆனாலும், குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி கால்களை மட்டும் அங்குமிங்குமாய் தரையில் தேய்த்தாள். இப்போதுதான் ஒருவரையொருவர் முதன்முதலாக நேருக்கு நேராய் சந்தித்துக் கொள்கிறார்கள். அவனையே பார்த்த பாமா, முகத்தைக் குவித்து அங்குமிங்குமாய் தாழ்த்தி, தோள்பட்டைகளை ஈரப்படுத்தினாள். தந்தை ரமணனுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறும்போது இளங்கோவின் பார்வையைத் தவிர்த்தவள், இப்போது அதைத் தடுக்க முடியாமல் தடுமாறி நின்றாள். “நல்லா நாலு கேள்வி நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்கணும். அவர் மட்டும் என்கிட்ட பேசட்டும், அப்போ தெரியும் சேதி” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, இனிமேலும் ஏமாற மாட்டேன் என்று நினைத்துக்கொண்டு நின்றாள்.

இளங்கோ, அவளை வேகவேகமாக நெருங்கினான். பிறகு அவளருகே போக வேண்டாம் என்பதுபோல் பாதியிலேயே நின்றான். அப்புறம் அதை ஈடு செய்யும் வேகத்தில் நடந்தான். அவளோ, அவனைப் பார்த்தும் பாராததுபோல் முந்தானை முனையைத் துாக்கி முகத்தில் வீசிக்கொண்டு, அவனிடம் நாலு கேள்வி நல்லாக் கேட்கணும் என்ற தோரணையில் சாய்வாகப் பார்த்தபடியே நின்றாள். அந்தப் பார்வைச் சரிவாலோ என்னமோ, இளங்கோ அவளிடம் முன்னைப்போலவே நெருங்கி நின்றான். உடனே அவள் ஒரு அந்நியனிடமிருந்து விலகுபவள் போல் சிறிது விலகினாள். பிறகு இவனும் மரியாதைக்குரிய துாரத்திற்கு பின்வாங்கிக் கொண்டே, மரியாதையற்ற குரலில் கேட்டான் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/297&oldid=636767" இலிருந்து மீள்விக்கப்பட்டது