பக்கம்:தாழம்பூ.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தாழம்பூ

மைதானத்திற்குள் நுழைந்து, அதற்கு அப்பால் உள்ள கட்டிடக் குவியல்களுக்குள் மறைந்து கொண்டிருந்தாள்.

முட்கம்பிகள், பேண்டை துவாரங்களாக்கி, அவற்றில் ரத்தத் துளிகளை மேலோங்கச் செய்தபோது, இளங்கோ, அப்படியே திகைத்து நின்றான்.பின்னால் கடாமுடா சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இரண்டு சிவப்புத் தொப்பிகளும், அவன் அம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டோவை வழிமறித்து ‘பத்து பாத்திரக்காரி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

ஆட்டோ ரிக்ஷாவும் அவனும் பாதிப்பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள். அம்மாக்காரி, ஆத்திரம் தாங்காமல் கத்தினாள் :

“ஏண்டா அவள் கிட்ட அடிபடறதுக்கா உன்னை வளர்த்தேன்? உங்க தாத்தா எப்பேர்ப்பட்டவர்ன்னு உனக்குத் தெரியுமா...? புலிக்குப் பிறந்து பூனையா போயிட்டியேடா... ஏறுடா, ரிக்ஷாவில ஏறு. இவங்களோட போய், அவள் கையில விலங்கு போட்டு நம்ம வீட்டுப் பக்கமா இழுத்துக்கிட்டு வா. எவ்வளவு செலவானாலும் சரி.”

கடைசி வார்த்தையில் ருசிகண்ட கான்ஸ்டபிள்கள், அவனை ஏறச்சொல்லி, முகத்தை ஏற்ற இறக்கமாக ஆட்டினார்கள். அம்மாக்காரி இறங்கிக்கொண்டாள். இளங்கோ ஏறிக்கொண்டான். ஆட்டோ பறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/30&oldid=636771" இலிருந்து மீள்விக்கப்பட்டது