பக்கம்:தாழம்பூ.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தாழம்பூ

சரோசா, கன்னங்களை உப்ப வைத்துக் கொண்டாள். அவனைப் பார்த்துக் கண்களை உருட்டினாள். இளங்கோவிற்கு ஒடுகிற ஆட்டோவிலிருந்து கீழே குதித்து ஓடிவிடத் தோன்றியது. ஆனாலும் அந்தப் போலீஸ்காரர் அவளை அதட்டலாகப் பார்ப்பதுபோல் இருந்ததால், சிறிது, பயம் தெளிந்தது. என்றாலும் அவளோ அல்லது அந்தப்போலீஸ்காரரோ தனது குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் தெரிந்ததால், அவனுக்கு மனம் வலித்தது. இது போதாது என்று அந்த ஆட்டோ டிரைவர் போலீஸ்காரர் இருக்கிற தைரியத்தில் எதிரே நான்வாரேன் என்பது மாதிரி லைட்டுப்போட்டுக் காட்டிய ஒரு காரை மோதப்போவது போல் ஒட்டி, ஒரு டிரக் வண்டியை உரசி, ஒரு சைக்கிளை வழி மறித்து தக்காரும் மிக்காரும் இல்லாமல் காவல் நிலையத்திற்குள் ஒடிப்போனது.

அந்தப் போலீஸ்காரர், இளங்கோவையும், சரோசாவையும் கைக்கு ஒரு பக்கமாய் வைத்துக் கொண்டு, நான்கு படிகள் ஏறி, இரும்புக்கிராதி கதவை அங்குமிமாய் தள்ளிவிட்டு, இடது பக்கமாய் போனார். அதன் முதல் அறையில் நுழைந்து ஒரு சல்யூட் அடித்தார். எதிர் நாற்காலியில் உடம்பே பற்றி எரிவதுபோல் புகை பிடித்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த சல்யூட்டை சிகரெட்டை ஆட்டி அங்கீகரித்து விட்டு அவளைப் பார்த்தார்.

‘அட சரோசாவா! எப்படி இருக்கே? உன்னோட லேட்டஸ்ட் வம்பு என்ன? - அப்புறம் உங்க ஏரியாவில நெட்டி கோஷ்டியும், பறட்டை கோஷ்டியும் எதுக்காக அப்படி அடிச்சுக்கிறாங்க? விவகாரம் கமிஷனர் வரைக்கும் போயிட்டுது. நீ. அவங்களுக்குக் கொஞ்சம் சொல்லப் படாதா?”

சரோசா, இளங்கோவை ஒரக்கண்ணால் பார்த்தாள். கூட வந்த போலீஸ்காரரையும் ஒரங்கட்டிப் பார்த்தாள். பிறகு, பேசியவரின் முன்னால் இருந்த மேசைமேல் இரண்டு கைகளையும் அட்டகாசமாகப் போட்டபடியே பதில் அளித்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/46&oldid=636795" இலிருந்து மீள்விக்கப்பட்டது